கங்கை புத்தக நிலையம்,23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600017. ( பக்கம் 192)
இந்த நூலாசிரியர் ஆன்மிக எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஸ்ரீ அரவிந்த தத்துவத்தில் மூழ்கி முத்தெடுக்கும் நெடும் பயணத்தில் ஆர்வம் மிக்கவர். இந்த நூலில், புதுவையில், அரவிந்த ஆச்ரமம் அமைய ஸ்ரீ அரவிந்தருக்கும் ஸ்ரீ அன்னைக்கும் உறுதுணையாக நின்ற அன்பர்களைப் பற்றி எழுதியுள்ளார்.
இந்த ஆன்மிக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் அறிஞர்கள், இன்ஜினியர்கள்,அதிகம் தன்னை வெளிப்படுத்தாத அன்பர் மோனி என்று பதினைந்து அரிய மனிதர்களைப்பற்றி சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
ஆனால், ஸ்ரீ அன்னையின் பார்வையில், இவர்கள் முகிழ்த்தவிதம் பற்றி கருத்துக்களை தொகுத்து அளித்திருக்கிறார். உதாரணமாக, பொன்மகன் சம்பக்லால் அதில் ஒருவர். ஸ்ரீ அன்னையால் "ஈகோ இல்லாத ,சிறுமதி கொள்ளாத தன்னலமற்றவர்' என்று வர்ணிக்கப்பட்டவர். அப்படி 100 சம்பக்லால் இருந்தால் போதும் என்று அன்னை கூறியதாகவும் தகவல் தரப்பட்டிருக்கிறது. ஆன்மிக சாதனைக்கு , ஏன் இறைவனின் வேலை செய்வதற்கு தகுந்தவர்கள் யார் என்பதை இந்த நூலில் விளக்கியிருப்பது சிறப்பாகும். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை பக்தர்கள் இந்நூலை விரும்பி ஏற்று மகிழ்வர்.