வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168. விலை: ரூ.50).
இரு குறுநாவல்களின் தொகுப்பான இந்நூலின் தலைப்புக் கதையின் நாயகி வீட்டு வேலைகள் செய்து, பம்பரமாகச் சுற்றி வரும் ஒரு சாதாரணப் பெண்மணி. உடல் உழைப்பு மூலம் அன்றாடம் கஞ்சி குடிக்க வேண்டுமேயல்லாது, `அது' விற்பனைச் சரக்கு அல்ல' என்றதோர் வாழ்க்கைப் பாடத்தை நன்கு அறிந்து, புரிந்துள்ள `ஆல் ரவுண்டர்!' சற்றே நீண்டுள்ளது இரண்டாவது நாவல் `அவசர அவசரமாய்...' அம்மி மிதித்து, அருந்ததி (நாயகியின் பெயரும் இதுவே!) பார்த்து, திருமணமாகி 15 ஆண்டு காலம் கழிந்த பின்னர் ஒரு சிறிய பிணக்கை (குழந்தைச் செல்வம் இல்லாமை) முன்னிட்டு, தம்பதியர் இருவரும் ஊதி ஊதிப் பெரிதாக்கி வக்கீல், வழக்கு, கோர்ட் என்றெல்லாம் தீராப் பகையாக உருவெடுக்கவே அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு எனும் அறிவுரை வழங்குவதாக நிறைவு பெறுகிறது.
சோழனின் தமிழ் நடையிலே, ஆங்காங்கே, நொங்கும் நுரையுமாக சீறிப் பாய்ந்து ஓடிடும் காவிரியையும், ஸ்படிகமெனத் தெளிந்த, அமைதியான ஏரியையும் ரசிக்கலாம்.கதைப் பிரியர்களுக்கு வர்ணஜாலம் காட்டி மகிழ்விக்கும் வண்ண வண்ண மத்தாப்பூ.