காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி., ரோடு, நாகர்கோவில்-629 001. (பக்கம்: 319. விலை: ரூ.175).
`கூகை'யைக் கோட்டானுக்கும் காகத்திற்கும் இடைப்பட்டதாகக் கூறும் வழக்கம் தமிழகத்தில் ஒரு பகுதியில் இன்றும் இருக்கிறது. இரவில் இரை தேடி வெளி வரும் இந்தப் பறவையிலும், பகலில் பதுங்கி உறங்கிவிடும் இயல்புடையது. பகலில் இதற்கு பார்வையும் தெரியாது. மிகுந்த வலிமையுள்ள பறவை இனம் இது. அபசகுனமாக, இது எழுப்பும் ஒலியை மக்கள் கருதுகின்றனர். இந்தக் `கூகை'ப் பறவையைச் சுற்றி எழுந்த எண்ணங்களை மையமாக வைத்து சோ.தர்மன் இந்த நாவலை எழுதியிருக்கிறார். இந்தக் கூகையை தலித்துக்களுக்கான குறியீடாக்கி, சம கால தலித் வாழ்கையைப் படைப்பாக, இவர் உருவாக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோவில்பட்டியைச் சுற்றியுள்ள வளமும், வளமின்மையும் கதை நிகழும் களங்கள். பறையர், பள்ளர், சக்கிலியர் ஆகிய மூன்று, ஒடுக்கப்பட்ட சமூக மக்களே கதையை வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரங்கள். குறிப்பாக, நடராஜ அய்யரின் அன்புக்குரிய சீனிக்கிழவனும், காளித்தேவரின் ஆசைக்கும் பாசத்துக்கும் தன் உடம்பையும், மனதையும் `வழங்கிய' முத்துப்பேச்சி என்ற தலித் பெண்ணும் நாவல் முழுவதும் பல அதிசயங்களை நிகழ்த்துகின்றனர். கூகைக்குக் கோயில் கட்டிய சீனிக் கிழவனும், காகத்திற்கு மிகப் பெரிய முக்கியத்துவம் தரும் முத்துப்பேச்சியும், தங்களுக்கு நேரிடும் நல்ல அல்லது கெட்ட காரியங்களுக்கு இந்த இரண்டு பறவைகளை முன்னிறுத்துகின்றனர். கிராமங்களிலிருந்து தீண்டாமை எனும் கொடுமை இன்னமும் ஒழிக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட அந்த சமூகம், அரசின் சலுகைகளைப் பெறவும், அதன் மூலம் வளர்ச்சி அடையவும் இயலாமல் பல சக்திகள் குறுக்கே நிற்கின்றன. ஒடுக்கப்பட்ட அவதிப்படும் கொடுமையை விட மிகப் பெரிய கொடுமை இது. சோ.தர்மனின் நாவல் இந்தக் கொடுமையைக் கையில் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறது. ஜாதி இந்துக்களின் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்புக் காட்ட முடியாமல் இணங்கிப் போய்விடும் கீழ் தட்டு மக்களின் கையாலாகாத்தனத்திற்கு மாற்றாக, சீனிக்கிழவன், ஒரு உயர் ஜாதி விதவை மாதரசியின் வேட்கைக்கு தாகம் தணிப்பதும், தாயுடன் மகளையும் பெண்டாள நினைத்த முத்தையாப் பாண்டியனை உயிரோடு கொளுத்தி, பழி வெறியை தணித்துக் கொள்வதும், நாவல் ஒரு தலைப்பட்சமாக, ஒரே கோட்டில் பயணிக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. வாய்ப்பு கிடைத்தபோது உழைத்து முன்னேற ஆசைப்படும் `தலித்'துக்களை வஞ்சினத்துடனும், வஞ்சனையுடனும் அடக்கி, ஒடுக்கி, ஒழிக்க பேயாய் அலையும் ஒரு சிலருடன் ஜமீன் கைகோர்த்துச் செய்யும் அக்கிரமம் ஒரு புறம் என்றால், போலீசாரின் வன்கொடுமையும் ஆணவ வெறி மறுபுறமுமாய், அந்த `ஏழை பாழை தாழ்ந்த ஜாதி' எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆசிரியர் விவரித்துள்ள பாங்கு அற்புதம்; அபாரம் - பல சமூகப் பிரிவினரை வெட்கித் தலை குனிய வைக்கிறது. சீனிக்கிழவனும், சாகசங்கள் நிறைந்த சாதனையைப் பாராட்டும் அதே நேரத்தில், முத்துப்பேச்சியின் துணிச்சலைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கலாம். இந்த இரண்டு பேர்களும் மிகச் சிறந்த வார்ப்புக்கள். நாவலுக்குள், வட்டாரத்தில் புழங்கும் அநேக புராண பாணி கதைகள், முன்னோர்களின் மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடுகளாகச் சில. ஆழமான நம்பகத்தன்மையுடன் கூடிய சில சம்பிரதாய நம்பிக்கைகள். ஏற்கவும் இயலாமல், தள்ளவும் முடியாமல், வாசகனின் பகுத்தறிவையே ஊசலாட்டம் போட வைக்கும் பல கதைகள். ஆசிரியருக்கு கோவில்பட்டி பகுதி தாவர, பறவை, இனம், மக்களின் பழக்க வழக்கங்கள் மீதுள்ள பரிச்சயங்கள், வாசகனை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. காளித்தேவன் - முத்துப்பேச்சி த