காலச்சுவடு பதிப்பகம், 659, கே.பி.ரோடு, நாகர்கோவில்-629 001. (பக்கம்: 272. ).
கும்பகோணத்தில் பிறந்து வாழ்ந்த பிரபல எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி ஆகியவர்கள் எழுத்துலகில் சாதனை புரிந்த முக்கிய பிரமுகர்கள். இவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்த கரிச்சான்குஞ்சு, எழுதியுள்ள இந்த ஒரே நாவல், முன்னே குறிப்பிட்டவர்களுடன் இணைத்துப் பேச நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன.கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் கணேசன் என்ற கதாபாத்திரத்துடன் துவங்கும் நாவல் தோப்பூரில் மற்றோர் கதாபாத்திரமான கிட்டாவுடன் கைகோர்த்துக் கொள்கிறது. பின்னர் மன்னார்குடி, தஞ்சை, மதுரை எனப் பயணம் செய்து திருச்சியிலும் ஷ்ரீரங்கத்திலும் முத்தாய்ப்பும் பெறுகிறது. ஒரு முப்பதாண்டுக் காலம், கதை நிகழ்கிறது. சங்கரி அம்மாளும், பாலாம்பாளும் சனாதனிகளாக வருகின்றனர்.
கணேசனும், கிட்டாவும், மாச்சியும், மன்னியும், பூமாவும், நீலாவுமாக, கிளுகிளுப்பூட்டும் பாலுறவுப் பிரச்னைகள் கதையில் சுவை கூட்டிச் சுவாரஸ்யம் சேர்க்கிறது. சுந்தரியும் கோதையும் மரபு மீறியும் கூட, `பண்பாட்டை'க் காப்பாற்றுகின்றனர். அந்தப் போலீசுக்காரர் பசுபதியின் வெளிப்பாடுகள் வித்தியாசமாகத் தெரிகின்றன. கதாபாத்திரங்களின் உரையாடல்களில் ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்புகளின் தாக்கத்தை உணர முடிகிறது. உடலின்பத்தை ஒரு ஆண் கூட முதலீடாக்கிக் கொண்டு, இத்துணை பெரிய அளவு வசதியான வாழ்க்கை நடத்த முடியும் என்பதைப் படிக்கும்போது (ஓரினப் புணர்ச்சி) வாசகனின் முகம் சுளிக்கிறது. இத்தனைக்கும் மேலே கணேசன் ஒரு தொழு நோயாளி. இந்தக் கசப்பான யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மோகமுள்ளையும், சில நேரங்களில் சில மனிதரையும், பொன் மலரையும் படித்து வியந்த ஒரு தலைமுறை, கரிச்சான் குஞ்சுவின் இந்த பசித்த மானுடத்தையும் படித்து வியக்கப் போகிறது. நாவலில் `காமம்' வெறித்தனமாக, மறைமுகத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. நயத்தக்க நாகரிகம் இதில் பளிச்சிடுகிறது. மிகச் சிறந்த நவீனம். நாவல் வாசிப்பவர்களால் பேசப்படும் படைப்பு இது.