காலம் வெளியீடு, 25. மருது பாண்டியர் 4வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி, மதுரை- 625002. (பக்கம்: 272).
இந்தியாவில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், செஸ் விளையாட்டில் சாதித்த பெண் பற்றிய கதை தான் சதுரங்களில் பயணம்.நாவலாசிரியர் பேரா. பி. முத்துக்குமரன் தன்னுடைய பார்வையில் இருந்து தன் மகள் கஸ்தூரியின் செஸ் பயணத்தை விளக்குகிறார். விளையாட்டில் ஆர்வம் காட்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாக அமைந்துள்ளது.செஸ் அரங்கில் எட்டு வயது முதல் பதினெட்டு வயது வரை கஸ்தூரி எட்டிய வளர்ச்சியை இந்நூல் பதிவு செய்கிறது. இதனை நாவல் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு விஷயமும் மிகவும் சுவாரஸ்யமாக பேசப்பட்டுள்ளது. தன் மகளுடனான பயணத்தை தந்தை சொல்லும் சுயசரிதை என்று கூட சொல்லலாம். கஸ்தூரியின் செஸ் விளையாடும் ஆர்வத்தை, பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை அவரது குடும்பம் துணை நின்று வளர்க்கிறது.ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் போது குடும்பமே குதூகலம் அடைகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த 20 வயதுக்குட்பட்டோர் போட்டியில் முதலிடம் பெற்ற மதுரையை சேர்ந்த கஸ்தூரி, பெண்களுக்கான சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் வென்று சாதிக்கிறார். இதற்காக சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பு பற்றி உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பற்றி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.கல்வியா... செஸ் போட்டியா? என்று வரும் போது, கஸ்தூரியின் பெற்றோர் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்கின்றனர். இது சரியான முடிவு தானா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று ஆசிரியர் இந்நூலை முடிக்கிறார்.