நாரத கான சபா 314, டி.டி.கே., ரோடு, சென்னை -600 018.
நம் பாரதத் திருநாட்டில், 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த சங்கீத மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் மற்றும் தியாகராஜர் அருளிச் செய்த கீர்த்தனைகள் காலத்தை வென்று நிற்கும் அளப்பரிய பொக்கிஷங்கள்! அவர்களது அமர சாகித்தியறங்கள், சங்கீதமெனும் ஆழ்ந்து, பரந்து விரிந்த மாபெரும் கடலில் சங்கமம் செய்து உள்ளது. இதன் பலனாக, தீஞ்சுவை குன்றாத இனிமையும், நளினமும் என்றென்றும் நீடிக்கிறது. பாரம்பரியத்தை வழுவாத இந்த வாக்கேயக்காரர்களுக்கு கர்நாடக சங்கீதம் ஓர் உபாசனையாக, உயிர் மூச்சாக - ஏன், இன்னுயிராகவே இருந்து வந்தது! பற்பல ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும், அவர்களது கீர்த்தனங்கள் இன்றளவும் பல்வேறு கலைஞர்கள், மாமேதைகளால் இசைக்கப்பட்டும், கோடான கோடி ரசிகர்களால் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு வருவதின் ரகசியமும் இதனால், அன்றோ?பெரும்பாலான கீர்த்தனங்கள் கைக்கு எட்டாமற் போயினும், தியாகராஜரின் 700க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள், தீட்சிதரது 450 மற்றும் சியாமா சாஸ்திரிகளது 70 பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் இவை யாவும் அகர வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கான ஆரோகண- அவரோகணங்கள், மேளம், ஜன்யம் மற்றும் ராகலட்சணக் குறிப்புகள், கர்நாடக இசையின் அடிப்படையான 72 மேளகர்த்தா ராகங்களின் "சம்பூரண' மற்றும் "அசம்பூரண' (ராகாங்க) பெயர்கள், ஸ்வரங்களுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தீட்சிதரின் கீர்த்தனைகள் அசம்பூர்ணப் பெயர்களைக் கொண்டு அமையப் பெற்றவை என்ற தகவல் குறிப்பிடத்தக்கது.
மேலும், "தேவக்ரியா' எனும் ராகம் தீட்சிதரின் சம்பிரதாயத்தில் "சுத்தசாவேரி' என்றும், தியாகராஜரின் சம்பிரதாயத்தில் "உதயரவிச்சந்திரிகா' எனவும் அழைக்கப்படுகிறது. மேலும், 252 ஜன்ய ராகங்களுடன், அவை ஒவ்வொன்றிற்குமான மேளம், ஆரோகண - அவரோகணங்கள், மாற்றுப் பெயர்கள் தாங்கிய சிற்சில ராகங்களின் பட்டியல், இந்துஸ் தானி ராகங்களுக்கு இணையான (அ) சாயலுடைய கர்நாடக ராகங்கள் போன்ற ஏராளமான தகவல்களையெல்லாம் குவித்து, இந்நூலினை இசைக்களஞ்சியமாக உருவாக்கிய இந்நூலாசிரியரது கடும் உழைப்பு வியப்பில் ஆழ்த்துகிறது!அனைத்துலக இன்னிசைப் பிரியர்கள், ரசிகர், வித்துவான்களின் பார்வை, அதி விமரிசையாக சென்னையில் நிகழவிருக்கும் இன்னிசைத் திருவிழா நோக்கிப் பதியவிருக்கும் இத்தருவாயில், ஒப்பற்றதோர் இசை வழிகாட்டிதனை வெளியிட்ட தொகுப்பாசிரியரும், நாரதகான சபையினரும் பாராட்டுக்குரியவர்கள். கர்நாடக இசை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இசை கற்பவர்கள், பயிற்றுவிற்கும் ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ரசிகர்கள், ஆர்வலர்களுக்கெல்லாம் அரியதோர் சுரங்கம் இந்நூல்!