திருவரசு புத்தக நிலையம், 23 (ப.எ.13), தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17 பக்கம் 224 /
சைவ சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்புகிற யார்யாருக்கும் இந்த நூல் மிகுந்த பயனுள்ளது. சுந்தரரைப் பற்றிய செய்தி ஒன்றை ஏழாம் தந்திரத்தினுள்ளும் பெரியபுராணத்தினுள்ளும் தேடிப் பெற நேரமில்லாமல் உடனடியாகப் பெற விரும்புகிற ஒருவர், தான் விரும்புகிற செய்தியை இந்த நூலில் எளிதாகப் பெறலாம்.
சுந்தரர் மேற்கொண்ட பதினோரு தலயாத்திரைகள், சுந்தரர் கண்டு பாடியதாகப் பதிவாயிருக்கிற எண்பத்து நான்கு தலங்கள், அந்தத் தலங்களுக்கு அவர் மேற்கொண்ட பயண வழிகளின் வரைபடங்கள், இந்தத் தலங்களில் சோழநாட்டுத் தலங்கள், ஈழ நாட்டுத் தலம், பாண்டி நாட்டுத்தலங்கள், மலைநாட்டுத் தலம், கொங்குநாட்டுத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டுத் தலங்கள், வடநாட்டுத் தலங்கள் எத்தனை என்ற விவரம், அந்தத் தலங்களில் பாடிய பதிகங்கள் என்னென்ன, பதிகத்தின் தொடக்கம் என்ன, பண் எது, சுந்தரரின் வரலாற்றோடு தொடர்புடைய தலங்கள் எவைஎவை, அவை தற்போது என்னவாக இருக் கின்றன. சுந்தரரை முன்னிட்டு நிகழ்த்தப் பெறும் விழாக்கள் பற்றிய விவரங்கள், சுந்தரருடன் தொடர்புடைய ஏனைய அடியார்கள் யார் யார், சுந்தரரின் வேறு பெயர்கள் என்னென்ன, ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் சுந்தரர் தம்மை எந்த பெயரில் அழைத்துக் கொண்டார். அந்தப் பெயர்களுக்கு அவர் வழங்கிக் கொண்ட முன்னொட்டுகள் என்னென்ன என்று இந்த நூலில் சுந்தரைப் பற்றிய எந்தச் செய்தியும் விட்டுப்போய்விடாமல் அட்டவணைப்படுத்தப்பட்டும் வரைபடமிட்டுக் காட்டப்பட் டும் விளக்கியுரைக்கப்பட்டும் இருக்கின்றன.
ஏழாம் திருமுறையையும் பெரியபுராணத்தையும் வரிவரியாகப் பிளந்து செய்திகள் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். நெடிய பெரிய உழைப்பு. மணியம் செல்வம் பாணியிலும் பத்மவாசன் பாணியிலும் வரையப்பட்டிருக்கிறவேதாவின் படங்கள் நூலை அழகு செய்கின்றன. வானதி குழுமப் பதிப்பகங்களின் சார்பில் வெளியாகும் நூல்களின் தரத்தை இந்நூலும் பெற்றிருக்கிறது.