முகப்பு » ஆன்மிகம் » வைணவ ஆசாரியர்களின்

வைணவ ஆசாரியர்களின் வாழ்வும் வாக்கும்

விலைரூ.400

ஆசிரியர் : எம்.ஏ.வேங்கட கிருஷ்ணன்

வெளியீடு: கீதாசார்யன்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
(ஐதிஹ்ய நிர்வாஹ விளக்கம்): கீதாசார்யன். 7, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 832)

பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் `திவ்வியப் பிரபந்தம்' என்றும், `அருளிச் செயல்' என்றும் `திராவிட வேதம்' என்றும் அழைக்கப்படுகின்றன.

இருபத்தியோராம் நூற்றாண்டில் காலகே்ஷபங்கள் கேட்டுத் தெளிவு பெற நேரம் கிட்டுவதில்லை. இதுபோன்ற நூல்கள் தான் கலங்கரை விளக்கமாக இருந்து பயன் தருகின்றன.

இந்நூலின் கண் உள்ள முன்னுரை மிக மிக அருமை; பெரிய விருந்திற்கு முன் தரும் `பசியூட்டும் ரசம் போல' நூல் முழுவதும் படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது. நூலாசிரியரின் ஆழ்ந்த அகன்ற அறிவும், கடும் உழைப்பும் ஆராய்ச்சியுரையாம் முன்னுரையில் காண்கிறோம்.

ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள கருத்துகளுக்கு ஏற்றபடி, ஆசார்யர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் ஐதிஹ்யங்கள் என்றும், ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் பலரும் கூறிய சிறப்புப் பொருட்களுக்கு நிர்வாஹம் என்றும் அறிகிறோம். (முன்னுரை பக்.22, 23). இவற்றால் அக்காலத்திய சமூக - சமய - அரசியல் நிலைகளையும், ஆசார்யர்களின் உயர் பண்புகளையும் நாம் அறியலாம் .

பெரியாழ்வார் திருமொழியின் இறுதிப் பாசுரத்தின் (பாசுரம் 473) இறுதி அடியில், `சாயை போலப் பாட வல்லார்' என்ற சொற்றொடருக்கு, எம்பார் கொடுத்த விளக்கம் படிக்கையில், எம்பாரின் குரு பக்தியும், நுண்ணறிவும் கண்டு வியக்கிறோம் (பக்.46).

மாற நேர் நம்பி என்பவர் ஆளவந்தாரின் சீடர்; இவர் தாழ்ந்த குலத்தவர்; இவர், இறக்கும் தருவாயில் மற்றொரு சீடரான பெரிய நம்பிகளிடம் தம் ஈமச்சடங்குகளைத் தக்க முறையில் செய்யும்படிக் கூறி, இறைவனடி சேர்ந்தார்; இவரின் ஈமச் சடங்குகளை மிக உயர்ந்தவர்களுக்குச் செய்யும் முறையில் பெரிய நம்பிகளே செய்து, நீராடி வந்தார். இதை அறிந்த ஷ்ரீராமானுஜர், வைணவத்தில் உயர்வு தாழ்வு என்பதே இல்லை என்று உலகோர் அறிந்து கொள்ள பெரிய நம்பிகளிடம், `கட்டுப்பாட்டை மீறலாமா?' என்று கேட்டார். பெரிய நம்பிகளும், `நாம் செய்ய வேண்டிய செயலை பிறரை விட்டுச் செய்யலாமோ? சந்தியாவந்தனம் செய்ய ஆள் வைத்துக் கொள்ளலாமா? ராமபிரான் ஒரு பறவையான ஜடாயுவுக்கு ஈமக்கடன் செய்தாரே! நான் ராமனை விட உயர்ந்தவனா? மாற நேர் நம்பி தான் ஜடாயுவை விடத் தாழ்ந்தவரா? நம்மாழ்வாரின் `பயிலும் சுடரொளி,' `நெடுமாறி கடிமை' என்னும் திருவாய்மொழிகள் பொருளற்ற கடலோசை போன்றவையா? ஆழ்வார்கள் அருளிச் செய்தவற்றை நாம் சிறிதேனும் பின்பற்ற வேண்டாமோ!' என்று கூறினாராம் (பக்.240, 241). இன்றைய மனிதர்கள் அனைவரும் உணர வேண்டிய மாபெரும் உண்மையை அன்றே வைணவர் கடைப்பிடித்தனர் என்பதை அறியலாம். ஷ்ரீ ராமனுக்குப் பின் வந்தோர், அவர் வழியைக் கடைப்பிடிக்கவில்லையே என்று வருத்தமும் உண்டாகிறது.

இப்படிப் பல சுவையான செய்திகள் கொண்ட அருமையான நூலை, இந்நூலாசிரியர் பழகு தமிழில் எழுதி, வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இன்றைய சொற்பொழிவாளர்களுக்கும், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஏன் எல்லாருக்கும் பயன்படும் அருமையான நூலாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us