எம்.கலைவாணன். மனை எண்.9, கதவு எண்.26, முதல் தளம், ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (முதல் பாகம்- பக்கம்: 216. விலை: ரூ.80. இரண்டாம் பாகம் - பக்கம்: 200. விலை: ரூ.75).
"நீதி நூல்கள்' என்ற தலைப்பில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த செம்மொழி வளர்த்த செந்தமிழறிஞர் கா.நமச்சிவாயர் பதிப்பித்த நூலினை, இரு தொகுதிகளாக இரண்டாவது பதிப்பாகக் கொண்டு வந்துள்ளனர்.
முதல் தொகுதியில் அவ்வையார் அருளிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தனையும், இரண்டாவது தொகுதியில் அம்பலவாணக் கவிராயரது அறப்பளீசுர சதகத்தையும்,குருபாததாசர் இயற்றிய குமரேச சதகத்தையும் பதிவு செய்துள்ளார். அவ்வை என்னும் சொல்லுக்குத் தாய் என்பது பொருள் எனத் தன் ஆய்வுரையைத் துவங்கி, பல்வேறு சங்ககால,தொல்காப்பிய, தேவார, திருவாசக காலத்தின் சொற்றொடர்களை, மையக் கருவாக வைத்து, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களையும், தனிப்பாடல் என்னும் புத்தகத்தில் காணும் பல செய்யுட்களையும் பாடியவர் இரண்டாம் அவ்வையார் தான் என்று நிறுவுகிற அவரது ஆய்வுக் களப்பணி நம்மை வியக்க வைக்கிறது. அவர் வாழ்ந்த காலம் கி.பி., பத்தாம் நூற்றாண்டிற்கு பிந்தியது தான் என ஆணித்தரமாக நின்று நிறுத்துவது இவரது ஆழ்ந்த புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. முதுபெரும் தமிழறிஞர் கா.நமச்சிவாயரது ஆய்வுப் புலமை தமிழுக்குக் கிடைத்திட்ட பெரும்பேறு. மூத்த தமிழ் ஆய்வாளர் பெ.சு.மணி, அவ்வையார் நால்வர் என்றும் அதில் இருவர் உறுதி எனத் தெரிவித்து, ஆத்திச்சூடி பாடிய அவ்வையார் காலம் கி.பி., 12ம் நூற்றாண்டு என்று கூறுகிறார். இதைப் போல முனைவர் தாயம்மாள் அறவாணன், ப.சரவணன் போன்றவர்களது ஆய்வில் அவ்வையாரது காலம் வேறுபடுவதையும் பார்க்க முடிகிறது.
ஆத்திச்சூடி என்பது முதற்குறிப்பாற் பெற்ற பெயர். ஆத்திச்சூடியில் காப்புச் செய்யுள் நீங்கலாக 109 நூற்பாக்கள் உள்ளன. அவற்றுள், மொழி முதலில் வரவாகாத எழுத்துக்களுக்கு, முதற்கண் உயிரெழுத்து ஒன்றை அமைத்தும், அமைக்காமலும் பாடப்பட்டுள்ளன. "இடம்பட வீடேடேல், அரவம் ஆட்டேல்,' அறனை மறவேல் இவை முதலில் உயிரெழுத்து அமைக்கப் பெற்றவை. உத்தமனாயிரு, ஊருடன் கூடிவாழ், ஒன்னாரைத் தேறேல் இவை, முதலில் உயிர் எழுத்து அமைக்கப்படாதவை. இவை இப்போது முதலில் உயிரெழுத்தாக எழுதப்பட்டு வழங்கினும், இவை அமைந்துள்ள இடத்தை நோக்கின் வ.வூ.வொ.வோ. என்பவையே ஆக வேண்டும் என்பது தெளிவு. திருநெல்வேலி ஏட்டிலும் இவ்வாறே எழுதப்பட்டுள்ளன.
ஆத்திச்சூடியில் யாதோர் இயைபு மின்றி "றன்னை மறவேல்' என்று அவ்வேட்டில் காண்கிறது. மொழிக்கு முதலில் வரக்
கூடாத எழுத்துக்களையும் அமைத்துச் செய்யுள் செய்த அவ்வையார், மொழிக்கு முதலில் வரக்கூடிய ளுகர, யகர, வருக்க எழுத்துக்களை விலக்கியது ஏனோ? என வினா எழுப்பி நம்மையெல்லாம் விடை காண வைக்கின்ற ஒரு இலக்கிய ஆய்வுக் களத்தைத் தந்தவர் பேராசிரியர் கா.நமச்சிவாயர். ஆத்திச்சூடி 109 நூற்பாக்களில் 92 இடங்களில் பாடபேதம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார். அதையும் பதிவு செய்து, வழங்கும் பாடம், கவிராயரது திருத்தம், திருநெல்வேலி ஏட்டில் உள்ளது எனத் தந்துள்ளார். ஆத்திச்சூடிக்கு புதிய உரை, கவிராயர் உரை, பழைய உரை எனப் பதிவு செய்து தனது திறனாய்வின் தனித்தன்மையைப் புலப்படுத்தியுள்ள பாங்கு இலக்கிய ஆய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்ற செந்தமிழ்க் கொடை. கவிராயரது உரை ஒவ்வொன்றிலும் ஒரு ஏற்புடைய திருக்குறளை மேற்கோளாகக் காட்டி, எளிய முறையில் உரையாத்திருப்பது ஆத்திச்சூடிக்கே இன்னுமோர் படி உயர்வைத் தருகிறது. ஒரு உதாரணம். 81வது பாடல் "பு