ஆசிரியர்: ரமா ரவி திதி. சி.என்.கிருஷ்ணமூர்த்தி. யங் மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 1188. விலை: ரூ.290)
இந்தி ஒரு கதம்ப மொழி. வடமொழி, வடமொழி அல்லாத இந்திய மொழிகள், அன்னிய மொழிகள் குறிக்கும் சொற்கள் இந்தியில் மருவியோ அல்லது அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. உருது மொழியின் தாக்கமும் இந்தி மொழியை முறுக்கேற்றும்
இந்தி மொழியின் அகராதியைத் தொகுத்தல், வெளியிடுதல் கடின உழைப்பின் வெளிப்பாடு. தோராயமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களை அகராதியாக இரு பத்திகளின் வடிவத்தில் சிறப்புற படைத்துள்ளனர்.
சொல்லுக்குச் சொல் இணையாக எழுதுகையில் தமிழ் - ஆங்கில மொழிகளின் பிரத்யேக பிரயோகங்கள் பொதுவாக சிற்சில இடங்களில் நெருடும். ஆனால், மிக்க கவனத்துடன் அருமையாக இப்பணியை செய்துள்ளனர்.
ஒவ்வொரு சொல்லிற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லின் பொருளோடு ஆண் பால், பெண் பால் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தி மொழியின் வார்த்தைகளின் பொருளை அறிய முற்படுபவர் தமிழ் - ஆங்கிலத்தின் சொல் வன்மையும் இணையாகப் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
மும்மொழி அகராதி என்பதால் இந்திச் சொற்களுக்கு இந்தியிலும் பொருள் தரப்பட்டிருக்குமா என்று எண்ணிப் பார்த்தால் ஏமாற்றமே. பொதுவாக அகராதியில் கையாளப்படும் சுருக்க வடிவங்கள் எதைக் குறிக்கின்றன என்பதை பட்டியலிடுவர். புதிதாக எழுத்துப் படிப்பவருக்கு சற்று சிரமம் ஏற்படலாம்.
"கபர்' என்ற சொல்லிற்கு "வதந்தி' (பக்.181) என்ற பொருளும் தரப்பட்டுள்ளது. "கபர் உடானா' என்று சொற்றொடராக வரும்போது "வதந்தி' என்ற பொருளில் கொள்ளலாம். நேரடிப் பொருளாக "வதந்தி' என்பதற்கு பயன்படுத்துவது இல்லை.
"ஆன்க்' (பக்.48) நேரடிப் பொருளைக் கொடுத்துள்ளனர். "ஆன்த் குல்னா' (அகக்கண் திறத்தல்), ஆன்க்தகனா (தூங்கிப் போதல்) என 15-20 பிரயோகங்களில் இந்தி மொழியின் வார்த்தை "அகராதி' பொதுவாக வெளிப்படுத்தும், ஆனால், இந்த அகராதியில் இத்தகைய விளக்கமான பிரயோகங்கள் பல இடங்களில் இடம் பெறவில்லை.
இணையான மும்மொழிப் பழமொழிகள் நூறும் இந்தி இலக்கணச் சுருக்கமும், பாரதிய வார மற்று அளவுகளும் ஒரு சில பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
புதிதாக மொழியைக் கையாளுபவருக்கு இந்த அகராதி, தமிழ் - ஆங்கில மொழி ஒப்பீட்டால் தெளிவைத் தரும். மொத்தத்தில் நல்ல முயற்சி. நல்ல அழகான வெளியீடு.