பூமி தட்டையானது. சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இன்று சூரியன், பூமி, மற்ற கோள்கள், சந்திரன்கள் ஆகியவற்றின் எடை, விட்டம், தூரம், அவற்றின் தன்மை, நட்சத்திரங்கள் எவற்றால் ஆனவை, பிரபஞ்சம் என்பது என்ன? போன்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது. நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையைவிட சுவாரசியம், நிலவுக்கு மனிதன் போய்வந்த கதை. இன்று செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ஜாலி ட்ரிப் போய்வர முடியுமா என்று விஞ்ஞான உலகம் ஆராயத் தொடங்கிவிட்டது. நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு பல சூரியன்களும் அவற்றின் குடும்பங்களும் நம் டெலஸ்கோப்களில் பிடிபடலாம்! அறிவியல் அசத்திக்கொண்டிருக்கும் காலம் இது. முதலில் நம் உலகம் எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும். அப்புறம்தான் மற்ற உலகங்களுக்குள் புகுந்து புறப்படமுடியும்!