இந்து மதத்துக்கு மட்டுமே அந்த தனிச்சிறப்பு உண்டு. கல்விக்கு என ஒரு தேவதை. காசுகளைக் குவியலாக அள்ளித்தர ஒரு கடவுள். நோய் தீர்க்க ஒரு தெய்வம். சுகமான வாழ்வளிக்க ஒரு பகவான்... பரம்பொருள் ஒன்றாக இருந்தாலும் அதன் கூறுகளை விசேஷமாகப் பிரித்து, நமக்கு 'லிஸ்ட்' தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் நமது பெரியவர்கள். கடவுள் என்றால் சும்மா இல்லை. அவர் நம்மையெல்லாம்விட ரொம்ப பிஸி. ஐந்துவிதக் காரியங்களை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கிறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, திரோபாவ, அனுக்கிரக என்று ஆகமம் சொல்வதையே ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய் என சிவபுராணம் சொல்கிறது. இந்நூல் என்ன சொல்கிறது? 'கண்'கண்ட தெய்வங்களை மிகச்சிறப்பாக வரிசைப்படுத்தியிருக்கிறது. கண் பார்வைக் கோளாறுகளை நீக்கும் கடவுள்களின் திருத்தலங்களை நோக்கிக் கைகாட்டுகிறது. 'குமுதம் பக்தி ஸ்பெஷல்' இதழில் தொடர்ந்து எழுதிவரும் மயன், இத்திருத்தலங்களுக்கெல்லாம் சென்று குறிப்புகள் பல திரட்டி, பலருக்கும் பயனுள்ள வகையில் இந்நூலைப் படைத்திருக்கிறார்.