150 மேன்மைமிகு ஆண்டுகள் : வெளியீடு: சென்னைப் பல்கலைக்கழகம். விளக்க மூலம்: சென்னைப் பல்கலைக் கழகம். தமிழாக்கம்: ராணி மைந்தன்.
இது ஒரு புகைப்பட வரலாற்றுத் தொகுப்பு. அச்சுப் பதிப்புக் குழுவுக்கு தலைவராக எஸ்.முத்தையா சிறப்பாக தயாரித்துள்ளார். இதை ஒரு நூல் என்று சொல்வதை விட பொக்கிஷம் என்றே கூறலாம்.
இன்று உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தின் தோற்றமும், 150 ஆண்டுகள் வளர்ச்சியும் அரிய புகைப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. 1857 செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், ஒரு காலத்தில் சென்னை ராஜதானியின் எல்லா கல்லூரிகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தது. 1956ல் மொழிவாரி மாகாண அமைப்பு ஏற்பட்ட பின்னர் தான் தமிழ்நாடு கல்லூரிகள் மட்டும் இதன் கீழ் வந்தன. இந்நூலில் காணப்படும் சில அரிய புகைப்படங்களின் அன்றைய அமைப்பு காணப்படுகிறது.
"கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்' என்ற மொழியை தனது சின்னத்தில் பதித்துக் கொண்டுள்ள பல்கலைக்கழகம் பட்டங்கள் வழங்கும் அதிகாரத்தை 1857ல் பெற்றது. சரித்திர ரீதியிலான பல அரிய விஷயங்களையும் இந்த நூல் தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆன்றோரைக் குறித்து படிக்கையில் இதன் சிறப்பு பன்மடங்காகிறது.
இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வேறெந்தப் பல்கலைக்கழகமும் கொண்டிராத அளவில் ஏழு வளாகங்களில் 68 துறைகளுடன் சென்னைப் பல்கலைக்கழகம் இயங்கி வருவதை அறிகிறோம். வரலாறு 1639-1857ல் தொடங்கி ஆறு அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் துவக்க கால கல்லூரி, துறைகள் பற்றிய விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. முதல் பள்ளியிலிருந்து எல்லா விவரங்களும் சரித்திரப்பூர்வமாக தொகுக்கப்பட்டுள்ளன. எந்தப் பக்கத்தை எடுத்துப் பார்த்தாலும் ஏதோ ஒரு சம்பவமோ அரிய விவரமோ தெரிந்தால் படிப்பது சுவாரஸ்யமாக உள்ளது. எல்லாக் கல்லூரிகளிலும் நூலகர்கள் இந்த நூலைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் ஆன்றோர்களைப் பற்றி அரிய உதவும்.
ராணி மைந்தனின் தமிழாக்கம் குறிப்பிடப்பட வேண்டியது. சற்றும் தொய்வின்றி அமைந்துள்ள நடை போற்றுதலுக்குரியது.