நெஞ்சினிக்கும் தமிழ் : நூலாசிரியர்: புலவர் அறிவுடை நம்பி, வெளியீடு : தமிழாலயம் பல்கலை ஆய்வு நிறுவனம், சாமித்தோப்பு .629704. (பக்கம் 256)
உலக மொழிகளுக்குள் எல்லாச் சமயங்களுக்கும் ( சைவம், வைணவம்,பௌத்தம், சமணம்,கிறித்துவம், இசுலாம்) உரிய இலக்கியங்களையும் காவியங்களையும் பெற்ற ஒரே மொழி தமிழ்'' என்று அறுதியிட்டுக் கூறி தமிழின் செம்மொழிச் சிறப்பிற்கு இதுவும் ஓர் அடையாளமாகும் ( பக். 138) என்று கூறும் அறிவுடைநம்பி, சங்க இலக்கியம் தொட்டு இன்று வரை தமக்கினியதான தரமான கவிதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
தமிழின் மேன்மையைத் தொன்மையை "நோவாம்சாம்ஸ்கி' ,டாக்டர் ஹார்க் போன்ற மொழியியல் அறிஞர்களின் சான்றுகளுடன் நிறுவியது சிறப்பு.
அடிசன், ஓ÷ஷா போன்றவர்களை பொருத்தமான வள்ளுவத்தில் பிணைத்து தமிழ் ஞான சம்பந்தர் தமிழோடு தம்மை 70 இடங்களில் இணைத்துக் காட்டியுள்ளதையும் , 52 இடங்களில் அடைமொழியாக தமிழினைச் சிறப்பித்துள்ளதையும் பட்டியலிட்டது ( பக்.172) அருமை.
"ஒன்று நீ இல்லை எனில் ஒன்றில்லை' எனும் திருவாசக நெறியில், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று மொழிந்த பேரறிஞர் அண்ணாதுரை பற்றியும், மன்னவன் நல்லவனால் மன்பதை உயரும் என்பதை நல்லியன்கோடன் பண்புகள் பற்றியும், தமிழர் உயர்வர் என்னும் மொழியுரிமைக் கட்டுரையோடு, திருமாவுண்ணி என்னும் நற்றிணை நங்கையைப் பற்றிய சிறுநாடகமும் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் படித்தால் இனிக்கும். நினைத்தாலே இலக்கிய சுகம் கனக்கும். புலவரின் நயமான இலக்கியநடை சிறப்பாக மிளிர்கிறது.