கீதா சார்யன், 7, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி. (பக்கம்: 288).
வைணவ நெறிகளை ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் கூறியுள்ளார். அந்நெறிகளின் பெருமைகளையும், விளக்கங்களையும் ஸ்ரீமத் ராமானுஜரும், அவர்களுக்குப் பின் வந்த ஆச்சார்யர்களும் கூறிச் சென்றனர். வைணவ ஆச்சார்யர்களில் தலைசிறந்தவராக கருதப்படும் பிள்ளை லோகாச்சார்யர் 18 நூல்களைச் செய்தார்; அவற்றில் ஸ்ரீவசன பூஷணம் மிக்க சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அந்நூல் மணிப்பிரவாள நடையில் உள்ளதால், அனைவரும் படித்துப் பொருள் உணர இயலாத நிலையில் உள்ளது. அக்குறை தீர, இந்நூல் பழகு தமிழில் வெளிவந்துள்ளது.ஸ்ரீவசன பூஷணத்தில் முதலிரண்டு பிரகரணங்களின் விளக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது; இதிலுள்ள 243 சூத்திரங்களையும், வினா - விடை யுக்தியில் அதாவது சிறுவர், சிறுமியர் வினாக்கள் தொடுக்க, அதற்குத் தக்க விடைகள் கூறுவது போல அமைத்துள்ள நூலாசிரியரின் நுண்மதி கண்டு நாம் மகிழலாம். கடினமான சூத்திரங்களுக்கு மிக எளிய நடையில் விளக்கியுள்ள ஆசிரியரின் நடை மிக அருமை.புருஷகாரம் என்ற சொல்லிற்குப் பரிந்துரை செய்தல் என்று விளக்குவதும் (பக்.7), உபாயம் என்பதற்கு வழி என்று பொருள் கூறி விளக்குவதும் (பக்.24), பிராட்டி - எம்பெருமான் இருவருடைய கருணைச் செயல்களை விளக்குவதும் (பக்.32-37), சுக்ரீவனையும், விபீஷணனையும் சீதாப் பிராட்டியின் சிபாரிசினால் ராமன் ஏற்றுக் கொண்டான் என்ற புதிய செய்தியை நயமுடன் கூறுவதும் (பக்.174) ஆசிரியரின் புலமைத் திறனை நமக்குக் காட்டும் இடங்கள் ஆகும்.பிரபத்தி, பாரதந்தரியம், கடாஷம் போன்ற சில வடசொற்களைத் தமிழில் தந்திருந்தால், படிப்போருக்குப் பொருள் எளிதாகப் புரியும்.மொத்தத்தில் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.