மாணவர்கள் வெற்றிக்கு ஏழு வழிகள்!: நூலாசிரியர்: டாக்டர் சி.சதீஷ். வெளியீடு: சன்வே புத்தகாலயம், 2/35 நீலி வீராசாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்:122)
தங்களது குழந்தைகள் மிகச் சிறப்பாக படிக்க வேண்டும்; அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் விரும்பும் பெற்றோர்கள், அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும்போது ஏதோ கைதிகளை நிற்க வைத்து விசாரணை செய்வது போல் குழந்தைகளை குடைகின்றனர். நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் படித்தவர்கள் உட்பட பெரும்பாலானோர் "கோட்டை' விட்டு விடுகின்றனர். அதைத்தான் "மாணவர்கள் வெற்றிக்கு ஏழு வழிகள்' என்ற அற்புதமான நூலில் எதார்த்தமான நிலையை எளிய தமிழ் நடையில் எழுதியுள்ளார் டாக்டர் சி.சதீஷ்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி முதல்வராக பணியாற்றி வரும் இவர், யோகா, ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதில் சிறந்த நிபுணராக விளங்குகிறார். அவருடைய இந்நூலில், குழந்தைகளிடையே மனச் சிதைவு ஏற்படாமல் மகிழ்ச்சியுடன் நல்ல குடிமகன் களாக உருவாக்குவது எப்படி? என்று குடும்பங்களில் நடைபெறும் அன்றாட யதார்த்த நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து தெளிவாக விளக்கியிருப்பது சிறப்பம்சம்.
உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கு நேரிடும் பிரச்னைகள், பெற்றோர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றையும் கோடிட்டு காட்டும் சதீஷ், அதில் இருந்து மாறி குழந்தைகளை நல்ல பண்புடையவர்களாக, மகிழ்ச்சியுடையவர்களாக வளர்ப்பதற்கான வழிகளை காட்டியுள்ளார்.
ஏழு தலைப்புகளினால் ஆன இந்த புத்தகம், பெற்றோர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம். அதேபோல் மாணவர்கள் வெற்றிக்கும், அவர்களுடைய இலக்குகளை அடைவதற்கும் பல்வேறு தலைவர்களுடைய வாழ்க்கை சம்பவங்களை கோடிட்டுக் காட்டியிருப்பது மாணவர் களை ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு பெற்றோரும் இந்தப் புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும்.