ஹிந்தி- தமிழ் அகராதி: நூலாசிரியர்: ரமா ரவி திதி மற்றும் சி.என்.கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு: எங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. போன்: 2433 1510. (பக்கம்: 816. விலை: ரூ.210).
மொழிப் புலமைக்கு அகராதி அவசியமானது. மற்ற மொழிகளைப் போல் சொல்லுக்கான பொருள் அறிந்து கொள்ள மட்டுமல்லாது, இலக்கண - பால் இனங்கண்டு கொள்ள ஹிந்தி அகராதி கை கொடுக்கும். மொத்தம் 50 ஆயிரம் சொற்களுக்கு இலக்கண பால் குறிப்புகளை எளிய இனிய தமிழ் பொருளோடு ஆசிரியர்கள் இந்த அகராதியைத் தொகுத்துள்ளனர். இலக்கணக் குறிப்பு தமிழில் தராமல், (ண.ட்), (ண.ஞூ), (தி.t) என ஆங்கில வடிவத்தில், பயன்படுத்துவோர் எளிதில் புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பக்கத்திலும் இரு பத்திகளில் அச்சிடப்பட்டுள்ளன. பொதுவாக, அகராதி என்றால் பூதக் கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஆனால், இந்த அகராதி எளிமையாக சிறுவர்களும், முதியோர்களும் படிக்கும் விதத்தில் போதுமான பெரு எழுத்துக்களில் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தம் 793 பக்கங்களில் சொற்கள் தரப்பட்டாலும், 100 பழமொழிகள் (ஹிந்தி - தமிழ்), இலக்கணச் சுருக்கம் 16 பக்கங்களில் தரப்பட்டுள்ளன. மொழிப் பெயர்ப்பாளருக்கும், ஹிந்தி - தமிழ் இலக்கிய நேசர்களுக்கும், குறிப்பாக மாணவமணிகளுக்கும் இந்த அகராதி மிகவும் கை கொடுக்கும்.