நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112. விலை: ரூ.35).
"செந்தமிழ் மரபு வழுவாமல், பொருள் பொதிந்த சடங்குகளை அனுசரித்து எழுதப்பட்ட மண விழா நடத்தும் முறை' என்ற முன்குறிப்புடன் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளபடியே பழைய சம்பிரதாயங்கள் எதையும் விட்டு விடாமல், பிள்ளையார் வழிபாட்டுடன் பந்தக்கால் நடுவது முதல் துவங்கி, நலுங்கு, மாப்பிள்ளை அழைப்பு, மணமேடையில் நிறைகுடங்கள் வைப்பது, ஓம குண்டத்தில் தீ வளர்ப்பது, காப்பு கட்டுவது, பெற்றோர்களுக்கான பாத பூஜை, மங்கலநாண் சூட்டுதல், அம்மி மிதித்தல் என்று ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துரைத்து, அச்சமயங்களில் பாட வேண்டிய தமிழ்ப் பாடல்களையும் தொகுத்து அளித்துள்ளார் ஆசிரியர். பாடல்கள் அத்தனையும், பழம் பெரும் பக்தி இலக்கியங்களில் இருந்தே தெரிவு செய்து தொகுக்கப்பட்டுள்ளன.
திருப்பள்ளி எழுச்சி, திருவிரட்டை மணிமாலை, திருமந்திரம், கம்பராமாயணம், பெரிய புராணம், திருப்பாவை, திருப்பல்லாண்டு, திருத்தாண்டகம், திருவாய்மொழி என்று மகத்துவம் வாய்ந்த பல்வேறு நூல்களின் சிறந்த பாடல்களை ஒருங்கே படிக்க நேர்கிற அனுபவமே அதி உன்னதமானது. மண மங்கலச் சிறப்பு, இல்வாழ்வின் மேன்மை பற்றி உலக அறிஞர்கள் கூறிய அரிய கருத்துக்கள் பலவும் தொகுக்கப்பட்டுள்ளன. திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களில் இருந்தும் நிறைய மேற்கோள்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணம் சடங்கு நிகழ்த்த அவசியமான பொருட்களின் பட்டியலோடு, சடங்கை நிகழ்த்தும் முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. எந்த முறையில் நிகழும் திருமணத்திலும் இந்நூலை மணமக்களுக்குப் பரிசளிப்பது மிகுந்த பயனைத் தரும்.