வரம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 184).
சாதாரண இசை உடலை ஆட வைக்கிறது. சிறந்த இசை மனதைத் தொட்டு நிற்கிறது. மிகச் சிறந்த இசை ஆத்மாவைத் தொட்டு புனிதப்படுத்துகிறது. இப்படிப்பட்ட மிகச் சிறந்த தெய்வீக இசையை, பக்தி ரசத்துடன் தந்தவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள். தெலுங்கில் இவரது கீர்த்தனைகள் இருந்தாலும் இதைப் பாடுபவர்கள் இன்றும் தெய்வீக ஆனந்தம் பெறுகின்றனர்.240 ஆண்டுகளுக்கு முன் திருவாரூரில் அவதரித்து, 80 ஆண்டுகள் சங்கீதத்திற்கு புது வாழ்வும், ராம பக்திக்கு புத்துயிரும் அளித்து, திருவையாறில் மறைந்த தியாகராஜரின் வாழ்க்கையை, தேனில் தோய்த்து எழுதியுள்ளார் வீயெஸ்வி. அங்கங்கே சங்கீத சுகந்தமும் சேர்த்து, அவரது கீர்த்தனைகளின் கருத்துக்களோடு, அவரது வாழ்க்கையைக் கலந்து முப்பரிமாணத்தில் இந்த நூலில் மிளிர்கிறது. சங்கீத ஒலியும், சாகித்ய அழகும், பக்திரசமிகு தியாகராஜர் வாழ்வும் என முப்பரிமாணப் பாடமாக; படிப்பவர் முன்னே இந்நூல் ஓடுகிறது.""தொரகுணா இடுவண்டி சிஷ்யுடு'' என்று சங்கீத ஆசிரியர் தன் மாணவன் தியாகராஜரை போற்றுவது; படிக்கும்போதே பிற்காலத்தில் இவன் சாதிக்கப் போவது தெரிந்து விடுகிறது. "எந்தரோ மகானு பாவு ' என்ற கீர்த்தனை உலகளாவிய உன்னத அன்பைக் காட்டுகிறது. ""நிதி சால சுகமா? ராமுநி சந்நிதி சேவ சுகமா? நிஜமுக பல்கு மனசா'நிதி வாழ்வில் உயர்ந்ததா? ராமனின் சந்நிதி சேவை உயர்ந்ததா என்ற அவரது கல்யாணி ராகக் கீர்த்தனை இன்றளவும் போற்றப்படுகிறது. இவரது சங்கீதத்தை மேடையில் பாடி கோடியில் சம்பாதிக்கும் கலைஞர்கள் இன்று இவரது பக்தியை மறக்கக்கூடாது என்ற நூலாசிரியர் கூறும் விதம் பாராட்டத்தான் வேண்டும்.ஒருசில எழுத்துப் பிழைகளை இனி வரும் பதிப்புகளில் சரி செய்ய வேண்டும்.
பல ஆயிரம் பணம் ஈட்டுவதற்காகவும், கை தட்டு பெறுவதற்காகவும் இன்று பாடப்படும் தியாகராஜரின் தெய்வீகக் கீர்த்தனைகள், எத்தனை ஏழ்மையில் சோதனையில் பக்தியில் உருவானவை என்பதை காட்டும் தெய்வீக இசை மணக்கும் நூல் இது.