இன்றிலிருந்து ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன் சென்று பார்ப்போம் - திருமலையில், ஆடி அசைந்தாடும் ஒரு சிறிய நிந்தா விளக்கு, வெறும் கைப்பிடி அரிசி ௸நிவேத்யம், கம்பீரம் இல்லாத ஒற்றைக் கருவறை கோயில்... உள்ளே இருந்தார் வேங்கடநாதர். அப்போது அவர்மீது சாண் அகலத்துணிதான் இருந்தது. குன்றுமணி தங்கம்கூட இருக்கவில்லை. நெற்றியில் திருமண் பளபளக்கவில்லை. பக்கத்தில் வராக சுவாமி கோயில் தவிர வேறு கட்டடங்களோ, மடங்களோ, வீடுகளோ இருக்கவில்லை.
கருவறையைச் சுற்றி காடும் வனமுமாகத்தான் இருந்தது. காட்டு மிருகங்கள் பயமின்றித் திரிந்தன. ஆட்கள் வந்து போவதே அபூர்வம்! இன்று கோடிக்கணக்கானோர் குவியும் வேங்கடாசலபதியின் திருமலா திருப்பதி - ஆதியில் இப்படித்தான் இருந்ததென்றால் நம்பமுடிகிறதா? தற்போது தங்கக் கோபுரங்கள், பிரும்மாண்டமாய் மதில்கள், பிராகாரங்கள், தேர்கள், பளபளக்கும் விமானங்களுடன் வளர்ந்து பெரிய திருத்தலமாக மலர்ந்துவிட்டது.
பதினாறு பிரம்மோற்சவங்கள், ஐந்து ரதோற்சவங்கள், வகைவகையாக நிவேத்ய விநயோகங்கள், கோடிக்கணக்கில் ஆபரணங்கள் எல்லாம் வந்துவிட்டன. இப்போது வேங்கடநாதரிடம் தினசரி கணக்கு ஒப்பிக்கிறார்கள். அவ்வளவு வருமானம்! இதெல்லாம் இப்போதுள்ள நிலைமை! எப்படி இந்த மாற்றம்? ஒரே நாளில் நடந்திருக்க முடியுமா? ஆயிரம் வருடத்திய சரித்திரத்தை ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கட்டி வானளாவிய கோபுரமாகச் சமைத்திருக்கிறார் நூலாசிரியர் அமரர் விஷ்ணுவர்த்தன். இந்நூலைப் படித்து நீங்கள் பிரமிக்கப்போவது நிச்சயம். வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து உருகப்போவதும் நிச்சயம்!