மூன்று பாகங்கள் முதல் பாகம்-பக்கங்கள் 446. விலை: ரூ.160, இரண் டாம் பாகம் - பக்கங்கள் 454, மூன்றாம் பாகம் - பக்கங்கள் 401. விலை: ரூ.150. பதிப்பகம்: அவென்யூ பிரஸ், 9-டி, சில்வா ரோடு, மயிலாப்பூர், சென்னை-600 004. போன்: 044-24990153.
பேராசிரியர் கல்கி எழுதிய மகத்தான சரித்திர நாவல், பொன்னியின் செல்வன். கல்கியின் படைப்புக்கு மெருகூட்டும் வகையில், ஓவியர் மணியம் வரைந்த அதி அற்புதமான சித்திரங்கள். லட்சோபலட்சம் வாசகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள இந்த நாவலின் தொடர்ச்சியாக, அனுஷா வெங்கடேஷ் காவிரி மைந்தனை எழுதியிருக்கிறார். இதற்கு முன்னர், "அமுதசுரபி' மாத இதழில் எழுத்தாளர் விக்ரமன், "நந்திபுரத்து நாயகி' என்ற தலைப்பில் எழுதிய நாவல் பரபரப்பாக பேசப்பட்டது. கல்கியின் எழுத்துக்களைப் படிக்கும் எழுத்தாள வாசகர்களுக்கு அவரைப் போல எழுதிப் பார்க்க ஆசை எழுவது இயல்பு. "காவிரி மைந்தனை' எழுதியுள்ள ஆசிரியர், தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு, ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை நாவலை வாசிக்கும் போது உணர்கிறோம். ஆனால், வார இதழில் ஓவியங்களுடன் "கல்கி'யின் எழுத்தைப் படித்த அதே உணர்வை பெற்றதாக சொல்வது சற்று சிரமம், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுக் காலம் கல்கி இதழில், வாசகர்களுடன் உறவாடி அளவளாவிய வந்தியத் தேவனும், குந்தவையும், வானதியும், நந்தினியும், பழுவேட்டரையரும், ரவிதாஸனும், ஆழ்வார்க்கடியானும் இன்னும் பல பாத்திரங்களும் மனத்திரையிலிருந்து அகல மறுக்கும் வார்ப்புக்கள்.அனுஷா வெங்கடேஷின் நாவலில், கல்கி படைத்த பாத்திரங்கள் வருகின்றன. கல்கியின் பாணியில் கதை விறுவிறுப்புடன் நகர்கிறது. ஆழ்வார்க்கடியானின் உரையாடலில் நகைச்சுவை வெளி ப்படுகிறது. அத்தியாயம் முடியும்போது சஸ்பென்சும், பின்னர் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் சஸ்பென்சின் தொடர்ச்சியை இரண்டு, மூன்று அத்தியாயங்களுக்குப் பின்பு வாசகனின் நினைவுத்தடத்திற்கு கொண்டு வரும் உத்தியை, கல்கி போல் இவரும் கையாண்டிருக்கிறார். ஒரிஜினல் கதைக்கு பங்கம் ஏற்படாத வகையில், ஆங்காங்கு சில மாற்றங்களை, கதையின் போக்குக்கு ஏற்ப அமைத்துக் கொண்டிருக்கிறார். "லோகா' என்ற கதாபாத்திரம் அ.வெங்கடேஷின் சேர்க்கை. கந்தமாறன், இதில் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.ஏழைப்பெண் பூங்குழலி மதுராந்தகனை மணப்பதும், ஊமைநாச்சியாருக்கு பொன்னியின் செல்வர் ஆலயம் கட்டுவதும், சோழப்பேரரசு தனது எல்லைகளை விரிவுபடுத்துவதுமாக கதை, அந்தக்கால காவிரி போல குதியாட்டம் போட்டுக் கொண்டு பயணிக்கிறது.பாண்டிய நாட்டின் பிரதிநிதியான ரவிதாசனின் சதிகள் முறியடிக்கப்படுவதும், கந்தமாறன், லோகாவை மணக்க முடியாமல் போவதும், ராஜேந்திரனை வளர்க்கும் பொறுப்பை லோகா ஏற்பதுமாக கதை முழுவதும் விறு விறுப்பான சம்பவங்கள். புத்தகத்திலிருந்து கவனத்தை வேறு பக்கம் திருப்புவது மிகவும் சிரமம்.காவிரி மைந்தனை மிக நேர்த்தியாக, அநேக கதாபாத்திரங்கள் இருந்த போதிலும் வாசகனுக்கு குழப்பம் ஏற்படாமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர். பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால் மட்டுமே இந்த நாவலைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும். முன்னுரையில் ஆசிரியர் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியிருந்த முடிவுரையை எடுத்துப் போட்டிருக்கலாம்.கதையை முடிக்கும் போது, ரவிதாசனை உயிருடன் விட்டு வைத்திருப்பதைப் பார்க்கும் போது, வேறு ஒரு எழுத்தாளருக்கு, காவிரி மைந்தனைத் தொடர்ந்து ஒரு நாவல் படைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் எண்ணம் இருக்கும் போல் தெரிகிறது.ஆற்றொழுக்குப் ப