என்ன சிறப்பு இந்த ஊருக்கு? ராம ஜெய பூமி இது! ஆம். இங்குதான் வெற்றிவிழா கொண்டாடினான் ராமன். ராவண வதம் முடிந்து கடல் கடந்து அவன் பாரத மண் மிதித்த இடம். ஜோதிர்லிங்க ஸ்தலம். காலங்காலமாகக் கலாசாரப் பெருமை பாடும் தலம். ஒருமைப்பாட்டை ஓங்கி ஒலிக்கும் இடம். ஆர்ப்பரிக்காத சமுத்திரம்... கப்பலுக்கே வழிவிடும் ஆர்ப்பாட்டமான தொங்கு பாலம். ஆலயமெங்கும் புண்ணிய தீர்த்தம்... இன்று அகதியாக வரும் நம் சகோதரர்களை ஆசீர்வதித்து உள்ளே அனுப்பும் நகரம் ராமேஸ்வரம். நாமும் ஆன்மிக அகதியாகச் சரணாகதி அடைவோம் அந்த ஈசனிடம். காசி க்ஷேத்திரம் பற்றிய நூல், அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மலர்ந்திருக்கிறது. யாத்திரையைத் தொடங்கி, நிறைவு செய்வதுவரை வழிகாட்டுகிறது இந்நூல். நூல் ஆசிரியர் பாரதிகாந்தன், தமது முந்தைய படைப்பில் 'நல்ல சேதி சொல்லும் சாமி' என்று கிராம தெய்வங்களின் பெருமை சொன்னவர்.