கே.எஸ்.மீரா. ராஜபிரபா அபார்ட்மென்ட், புது எண் 138, பழைய எண்.61-டி. வன்னியர் தெரு, சூளை மேடு, சென்னை-600094. (பக்கம் : 432 )
சாகித்ய அகடமி பரிசு பெற்ற ஆசிரியர். சௌராஷ்டிரர் மொழி,இலக்கியம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஊறித் திளைத்தவர். ஆகவே, சௌராஷ்டிர மொழிபேசுவோரின் வரலாற்றை அறிவுப் பூர்வமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். ஆய்வாளர்களுக்கு உதவும் தகவல்களும் உண்டு. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவைத் தாயகமாகக் கொண்ட இவர்கள் காலப்போக்கில் மதுரையில் வந்து தங்கி அப்படியே இணைந்து விட்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பகுதியை இவர்கள் பார்க்க விரும்பியது இல்லை. மாறாக, சௌராஷ்டிரத்தில் இருந்து தீர்த்த யாத்திரை செய்யப்புறப்பட்டு, மதுரை வந்து குடியேறியதாக வரலாற்றை மறக்காமல் இன்னமும் கூறும் வழக்கம் இருக்கிறது என்கிறார் ஆசிரியர். இன்று மதுரையில் இவர்கள் பேசும் சௌராஷ்டிர மொழியில் தமிழ்க்கலப்பு 90 சதவீதம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாட்டில் 46 ஊர்களில் சௌராஷ்டிரர்கள் வாழ்கின்றனர் (முழுத்தகவல் பக்கம் 182)., பொதுவாழ்வில் சௌராஷ்டிர பிரமுகர்கள் குறித்த தகவல் (பக்கம் 234) சௌராஷ்டிர மொழிச் சொற்கள் குறித்த விளக்கம், அச்சமூகத்தில் கவுரம் மிகுந்த பெரியவர்களின் படங்கள், சரித்திர முக்கிய ஆவணங்கள் எல்லாமே இதில் காணலாம்.
சௌராஷ்டிர மக்களின் வரலாற்று ஆவணமாக எழுதப்பட்டிருப்பதுடன், அவர்களைப் பற்றிய முழுத் தகவல் கொண்ட அருமையான படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.