தமிழரங்கம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 234)
பேராசிரியர் அ.பாண்டுரங்கள் முதுபெரும் தமிழறிஞர், சைவத்திலும் வைணவத்திலும் ஆழப் புலமைமிக்க ஆய்வாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அரை நூற்றாண் டிற்கும் மேலாக இவர் தமது தமிழ் ஆய்வுக் களத்தில், தன்னை முழுமையாய் ஆட்படுத்திக் கொண்டு; செம்மொழியாம் நம் அன்னைத் தமிழுக்கு தொய்வில்லாது படைப்புப் பணியை உழவாரப் பணிபோல் செய்து வருகிற பெருமகனார். தமிழ் ஆராய்ச்சி என்ற தலைப்பில் துவங்கிய தொகை நூல்கள் பாடப்பட்ட காலம் என்ற தலைப்போடு எட்டு கட்டுரைகளாக இந்நூல் மிளிர்கிறது. இக்கட்டுரைகள் யாவும் ஒரே அமர்வில் திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. வெவ்வேறு கருத்தரங்குகளில் படிக்கப்பட்டு ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டவைகளின் தொகுப்பு இந்நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சங்ககால தொகை மரபு பற்றிய வினாக்களை முன்னிறுத்துகின்றன. தமிழில் தொகை நூல்கள், எட்டுத் தொகை, தொகுப்பு நெறிகள், தொகை நூல்கள் தொகுப்பட்ட காலம், தொகை நூல் பாடல்கள், பாடப்பட்ட காலம் ஆகியனவற்றை தமது ஆய்வுக்காலத்தின் கருப்பொருளாய் வைத்துக் கொண்டு நீண்ட நெடியதொரு ஆய்வுச் செய்திகளை பதிவு செய்துள்ளார்.
"தமிழ் மக்களின் பண்டை வரலாறு பெருமையை, புகழை நிலைநிறுத்துவதற்குத் தேவையாக இருந்த ஆவணங்களை கரையான்களின் வாயிலிருந்து மீட்டுக் கொடுத்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை-பக்கம் 17. "உ.வே.சா., சங்க இலக்கியங்களில் எதனையும் பதிப்பிப்பதற்கு முன், சி.வை.தா.1868ல் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சோனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார் - பக்கம் 19 "மதுரை என்னும் சொல் கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலேயே பாண்டியன் தலைநகராகக் குறிக்கப்பட்டுள்ளது.-பக்கம் 112. சங்க இலக்கிய ஆய்வுக்களம் மிகத் தொன்மை வாய்ந்தது. ஆனால், கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக பேரறிஞர்கள் ரா.ராகவையங்கார் மு.ராகவையங்கார் போன்றோர்களுக்கும் பிறகு நிலவிய வெற்றிடத்தை பேராசிரியர் அ.பாண்டுரங்கன் இந்நூலின் வாயிலாக ஈடு செய்துள்ளார் என்பதே உண்மை.