(பக்கம் 400) மலரின் முகப்பு அட்டையில் நாராயணன் நம்பி திருக்கல்யாண வண்ணப்படம் இருக்கிறது என்றால், மலரை திறந்ததும் பட்டீஸ்வரம் ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை தரிசிக்கலாம். எப்போதும் நம்முடன் யோகி சுரத்குமார் இருக்கிறார் என்பதை நீதியரசர் அருணாசலம் ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார். அட்டைப் பட ஆண்டாள் கனவாக, தீபாவளி நன்னாள் செய்தியாக நல்லவர் வாழ, அல்லவர் அழிய விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
அற்புதர் உ.வே. சாவை வணங்குவோம் என்ற சவுந்தரா கைலாசம் பாடல், இளந்தேவன், கலியன் சம்பத்து என்று பல கவிதைகள் மலருக்கு அழகு சேர்க்கின்றன. குழந்தை உள்ளத்துடன் வாழ்ந்த டைகர் வரதாச்சாரியாரை சமீபத்தில் மறைந்த நீலம் கட்டுரையாகப் படம் பிடித்திருக்கிறார். நீதியரசர் ராமன் தூய துப்புலாரை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
நதியும் மனித வாழ்வும் ஒன்று என்பதை ராமசுப்பு கட்டுரையில் காணலாம். தமிழகத்தின் வரலாற்றுக் காலத்தை ஆதாரங்களுடன் நிரூபிக்க உதவும் கிரேக்க மற்றும் பன்னாட்டு நாணயங்கள் பற்றி தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை, பல்வேறு தகவல்களைக் கொண்டதாகும்.
கவிஞர் பா.விஜய், கவுதம நீலாம்பரன், வழக்கறிஞர் பி.பி. ராமானுஜம் உட்பட பலரது படைப்புகள் மலருக்கு நறுமணம் சேர்த்திருக்கிறது. படித்து, சுவைக்க ஏற்ற வகையில் வண்ணப்படங்கள், சிறந்த ஓவியர்கள் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.