(பக்கங்கள்: 400)ஆனந்த விகடன் என்றாலே நகைச்சுவை தான். இந்த ஆண்டு தீபாவளி மலரில் சாலமன் பாப்பையாவையும், காத்தாடி ராமமூர்த்தியையும் அழைத்து சிரிப்பு வெடி கொளுத்தச் சொல்லியிருக்கின்றனர். வழக்கம்போல நட்சத்திர அந்தஸ்து பெற்ற படைப்பாளிகள் வாசகர்களின் இலக்கியப் பசிக்கு இனிப்பு வழங்கியிருக்கின்றனர். பேரறிஞர் அண்ணாவையும், நேர்மைத் திலகம் கக்கனையும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு நன்கு ஞாபகப்படுத்தியிருக்கின்றனர். டென்மார்க் நகரின் அருமை பெருமைகளை, வசந்தி நாராயணமோகன் எழுதியுள்ளார். வண்ணப்படங்கள் கண்களை கவர்கின்றன.
"குமரா போற்றி என்று தி.தெய்வநாயகம் முருகனின் படை வீடுகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கவிதைகளுக்கும் பஞ்சமில்லை; கட்டுரைகளுக்கும் பஞ்சமில்லை. ஓவியர் சிவசுப்ரமணியத்தின் 25 ஆண்டுகால ஓவிய அனுபவங்கள் விகடன் மலருக்கு, "எக்ஸ்ட்ரா சிறப்பு சேர்க்கிறது.
பிரபல கட்டுரையாளர் ரஜத், டுவென்டி - டுவென்டி கிரிக்கெட் போட்டிகள் பற்றி எழுதியிருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறை. ரஜத்தின் பேனா கக்கனின் பெருமையை அழகாகப் பேசுகிறது. படிக்க, ரசிக்க, நினைத்து மகிழ நிறைய சுவாரஸ்யங்களுடன் விகடன் தீபாவளி மலர் வெளிவந்திருக்கிறது.