இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு: நான்காம் தொகுப்பு வடக்கிந்திய மொழிகள்
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை600 017. (பக்கம்:644, விலை:ரூ.500).
காஷ்மீரி, பஞ்சாபி, இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளின் இலக்கியங்கள் பற்றிய அறிமுகத்தினை இந்த நான்காம் தொகுப்பில் சிவசங்கரி தந்துள்ளார். வட இந்திய மொழிகளான இந்த ஐந்து மொழிகளில் காஷ்மீரி, பஞ்சாபி ஆகிய மொழிகள் பற்றி அறிய அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள முடியும்.
உருது, இந்தி ஆகிய மொழிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்வதற்கு வட இந்தியா முழுவதும் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அந்த வகையில் வட மாநிலங்கள் தோறும் சென்று இலக்கியங்களையும், இலக்கியப் படைப்பாளர்களையும் மொழி அறிஞர்களையும் சந்தித்து இந்த நூலினைத் தந்துள்ளார் நூலாசிரியர்.
சம்ஸ்கிருதம் பற்றி ஆய்வு செய்வதற்குத் தமிழகத்தில் இருந்தாலே போதும் எனும் அளவிற்கு இங்கேயே சம்ஸ்கிருதப் பேராசிரியர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மாநிலக் கல்லூரியின் சம்ஸ்கிருதப் பேராசிரியர் ஆர்.தியாகராஜனின் கட்டுரையை இந்த நூலில் இடம் பெறச் செய்துள்ளார்.
இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு) பேசப்படும் மொழிகளின் இலக்கியங்களை இந்தியர் அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முயற்சியின் நிறைவுத் தொகுதியான இந்த நூல் இந்தியாவின் வடபகுதியில் பேசப்படும் மொழிகளில் உள்ள கதைகளையும் கவிதைகளையும் தமிழில் தருகிறது.
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல், கட்டுரைகள் என்று தொகுக்கப் பெற்றுள்ள இந்த நூல் எழுத்தாளர் சிவசங்கரியின் பதினாறு ஆண்டுகால உழைப்பின் நிறைவைச் சிறந்த முறையில் உணர்த்துகிறது.