ரவி பப்ளிகேஷன்ஸ், ராஜ்கமல், 45/21, நான்காவது அவென்யூ, அசோக் நகர், சென்னை83. (பக்கம்: 182).
சித்தி பெற்ற சித்தர்கள் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அல்ல, மாறாக, அன்பு, கருணை, ஜீவகாருண்யம் ஆகிய நன்னெறிகளுக்கு ஒளிவிளக்காகவும், ஆன்மாவையும், உள்ளுள் உறைந்திருக்கும் பரம் பொருளையும், பேரின் பத்தையும் துய்த்த முழுமையானவர்கள் என அறிதல் வேண் டும்.
பத்ரகிரியார் எனும் அரசரை, பட்டினத்தார் துறவறம் பூணச் செய்து, பின்னர் அவரும் சித்த புருஷர் ஆனவர். அவர் அருளிச் செய்த 230 செய்யுள்களில் 108க்கான பொழிப்புரையும், விளக்கவுரையும் இந்த முதல் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
"புலம்பல் என்ற சொல் சற்று விசித்திரமாகத் தோன்றினாலும், பேரின்ப நிலையை வெறும் வார்த்தைகளால் உணர்த்த இயலாத முக்தி தரும் ஞானமொழி என்பது நூலாசிரியரின் வாதம்!
பத்ரகிரியாரின் ஈரடிச் செய்யுள்கள் ஒவ்வொன்றும் "எக்காலம்? என்ற வினாவில் முடிவதை "மெய்ஞான அறிவு எப்போது கிட்டும் என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்பே! திருமூலர், அகப்பேய் சித்தர், போகர், பட்டினத்தார், சிவவாக்கியர், இரமணர் போன்ற ஏனைய மாபெரும் ஞானியர்களது கருத்துக்கள், பத்ரகிரியாரின் புலம்பல்களுடன் ஒப்பு நோக்கியுள்ள விதம் இந்நூலாசிரியரின் பரந்த தமிழ்ப் புலமையைப் பறை சாற்றுகிறது!
மேலும், இந்நூலில் சித்தர்கள் பெண்மைக்கு முக்கியத்துவம் அளித்தது, தந்திர யோக குண்டலினி முறை, மனித உடல் பற்றிய விளக்கங்கள், குறியீட்டு மொழிகள் ஆகிய சித்தர்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒருமித்து வழங்கப்பட்டுள்ளன.
தத்துவப் பேராசிரியராக, பல்வேறு உயர்நிலை கல்வி நிலையங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரியர் திறமை வெளிப்படுகிறது. தமிழ் இலக்கியம், தத்துவம் மற்றும் சித்தர்கள் பற்றிய ஒருங்கிணைந்த, நல்ல நூல்.