விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்’ _ என்ற ஆன்மிக கோஷத்துடன், சமூக மாற்றத்தை ஓர் இயக்கமாக முன்னின்று நடத்திக் காட்டியவர், ‘அய்யா’ என்று அன்பர்களால் அழைக்கப்படும் வைகுண்டர்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், நம் நாட்டின் தென்கோடிப் பகுதியில் தோன்றிய இயக்கம், ‘அய்யா வழி இயக்கம்’. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர்ஜாதிக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்டு, பெரும் இன்னல்களை அனுபவித்த மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தி, ஆன்மிக வழியில் அவர்களை உயர்வடையச் செய்தவர் இவர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் ஆன்மிகத் தேவை இருக்கிறது. அன்றைய காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டு உரிமையை வழங்கியதால், அய்யா வழி மதம் தோன்றியது. கிட்டத்தட்ட நூற்று எழுபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்து ஓர் ஆன்மிக விருட்சமாக இன்று கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த நூல், முத்துக்குட்டியாக இருந்தவர் எப்படி அய்யா வைகுண்டரானார், அதற்காக அவர் செய்த மௌனத் தவம் எப்படி இருந்தது, திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் உயர் ஜாதிக்காரர்களின் பிடியில் இருந்து தம் இன மக்களை விடுவித்து எப்படி மேம்பாடு அடையச் செய்தார் போன்ற வரலாறு மற்றும் ஆன்மிகத் தகவல்களை அழுத்தமாகச் சொல்கிறது.
அய்யா வழியில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு நியமங்கள், சாமித்தோப்பு வைகுண்டபதியில் நிகழும் விழாக்கள் என்று அய்யா வைகுண்டரைப் பற்றிய முழுத் தகவல்களையும் வாசகர்களுக்கு அளிக்கிறார் நூலாசிரியர் வெ.நீலகண்டன்.