விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது.
இன்டலிஜன்ட் கோஷன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. எமோஷனல் இன்டலிஜன்ட் (இஐ) உணர்ச்சிக் கூர்மை அல்லது சமயோசித அறிவு என்று சொல்லலாம். எமோஷனல் கோஷன்ட் (இக்யூ)_ஐ உணர்ச்சிக் கோவை எனலாம்.
எமோஷனல் இன்டலிஜன்ஸ் அட் ஒர்க் என்று சேஜ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். நம் மன உணர்ச்சிகளை அறிந்து, புரிந்து செயல்பட இந்த நூல் பெரிதும் உதவுகின்றது. நூலாசிரியர் தலீப் சிங், மனோதத்துவ ரீதியில் இந்த விஷயத்தை மூன்றாகப் பிரிக்கிறார்...
* உணர்ச்சி அதிகமாக இருத்தல் (தொட்டாற்சுருங்கி ரகம்)
* உணர்ச்சிகள் முதிர்ச்சியாக இருத்தல் (ஆழ்ந்த உணர்வு ரகம்)
* உணர்வுகளை திறம்பட சந்தித்தல் (திறம்பட எதிர்கொள்ளும் ரகம்)
பணியிடங்களில் நிகழும் மாற்றங்களை திறம்பட சந்தித்து, கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து, உற்பத்தியைப் பெருக்கும் வழிகளை இந்த நூலில் எளிமையாக விளக்குகிறார் தலீப் சிங்.
சிறந்த நிறுவனங்கள் பற்றிய குறிப்புகள் கொண்ட இந்த நூலில், இந்திய நிறுவனங்களில் பணி புரியும் தன்மைக்கு ஏற்ப பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. சிறந்த முறையில் பல பெரிய நிறுவனங்களை ஆராய்ந்து, ஐந்து முக்கியத் தகவல்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிறந்த ஆலோசனைகள் உள்ளன.
உணர்ச்சிக் கோவையை (இக்யூ) அதிகரிக்க சிறந்த பயிற்சிகள்... உணர்ச்சிப் போராட்டங்களை திறம்பட சமாளித்தல்... கோபத்தை அடக்கி ஆளுதல்... சுய மரியாதையை அதிகரித்தல்... மற்றவர்களின் குறைகளுக்கு செவி சாய்த்தல்...
மிகச் சிறந்த முறையில் உணர்ச்சி ஆளுமை குறித்து விளக்கப்பட்டுள்ள இந்நூல், இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள், மேலாண்மைக் கல்வி நிபுணர்கள், அரசாங்க அதிகாரிகள், மனநல மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.