விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
தொண்டு, சேவை, பொது நலம் ஆகியவற்றுக்கான விளக்கத்தை அறநூல்களாகக் கொடுத்து, அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த மகான்கள். அவர்களுள் ஒருவராக, ஆதரவற்றோருக்கு ஆபத்பாந்தவனாக இருந்து அவர்களை அரவணைத்து அருள்புரியும் கருணைக் கடல் சிவானந்தர்.
தமிழகத்தில், தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர் சிவானந்தர். மருத்துவப் படிப்பில் இருந்த ஆர்வத்தினால், பல கஷ்டங்களுக்கு இடையில் மருத்துவப் படிப்பை முடித்தார். தான் கற்ற மருத்துவ நுணுக்கத்தை மக்களின் நல்வாழ்வுக்காகவே அர்ப்பணித்தார். தர்மசீலர், தயாளகுணம் கொண்டவர். ஆத்ம சாதனை கைவரப்பெற்றவர். இன்னும் பல பல நற்பண்புகள் கொண்ட மகானாக சிவானந்தரை இந்நூல் நமக்குக் காட்டுகிறது.
மலேசியாவில் டாக்டராகப் பணி செய்த குப்புசாமி என்ற சிவானந்தரிடம் சிகிச்சைக்கு வந்த தமிழ்த் துறவி கொடுத்த நூல், சிவானந்தரின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதையும், மருத்துவப் பணியில் பணமும், புகழும் சேர்ந்தபோதும் அதில் நாட்டம் இல்லாமல், ஆன்ம ஒளி தேடி தாய்நாடு திரும்பி, ரிஷிகேசத்தில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக சேவையோடு பொதுநலச் சேவை செய்ததையும் இந்நூலில் படிக்கும் போது, சிலிர்ப்பு ஏற்படுகிறது
வெகு தூரம் சென்று தர்மாசிரமங்களில் யாசகமாக பெற்று வந்த பால், தயிரை நோயாளிகளுக்கும், பாதாம், பிஸ்கட்டுகளை தன்னைப் பார்க்க வரும் விருந்தினருக்கும் கொடுத்துவிட்டு, காய்ந்த ரொட்டியை தனக்கான உணவாக்கிக் கொண்டு, தியாக உள்ளத்தோடு வாழ்ந்த சிவானந்தர் பற்றிய தகவல்கள் நெஞ்சை நெகிழ வைக்கும்.
நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாசன், இளமைக்காலத்தில் சுவாமி சிவானந்தரோடு நெருங்கிப் பழகியவர்; சீடராக இருந்து சுவாமிஜியின் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தை பல இடங்களில் கொண்டு சென்றவர். ஆன்மிக அன்பர்களுக்கும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கும் இமயஜோதி சிவானந்தரை உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இந்த நூல் வரப்பிரசாதமே!