விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சமூகத்தில் நடைபெறும் சில தவறுகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம். ஒரு தவறு நம் கண்முன்னே நடைபெறும்போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை எனில், நாம் சமூகத்தைவிட்டு ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டோம் என்றுதான் பொருள். அச்செயலுக்காக குறைந்தபட்சம் நம் எதிர்ப்பைக்கூட காட்டாதபோது, இச்சமூகத்திலிருந்து நாம் ஏதும் பெறுவதற்கு உரிமை இல்லாதவராகி விடுகிறோம். சிலருக்கு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அடிக்கடி துறுத்திக்கொண்டு மேலெழும். ஆனாலும், சிலர்தான் இதனைத் துணிந்து செய்கிறார்கள்.
அந்த சிலரில் ஒருவர்தான் இந்நூலாசிரியர் எம்.ஏ.ஜவஹர். இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தவை. கட்டுரைகள் அனைத்தும் மத்திய&மாநில அரசுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட கணைகள். மத்திய_மாநில அரசுகளின் செயல்பாடுகள்மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டுகள் அவர்களே மறுக்க முடியாத அளவுக்கு தர்கரீதியாக உள்ளன. உதாரணமாக, நல்ல லாபத்தில் இயங்கிவந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டதையும், நட்டத்தில் இயங்கிவந்த இந்திய ரயில்வே நல்ல லாபத்தில் இயங்குவதும் நடுநிலையோடு விவாதிக்கப்பட்டுள்ளது.
அரசை குறைகூறுவது மட்டுமே கோபசாரியின் நோக்கமாக இருக்க முடியாது. தவிர, குறைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான தகுந்த வழிமுறைகளையும் கூறுகிறார்.
‘ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது..?, இது இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்குமே..?’ என்று நீங்கள் கேட்க நினைத்த கேள்விகளும், நீங்கள் யோசித்து வைத்திருந்த தீர்வுகளும் இந்நூலில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன.
அதிகாரத்திலிருப்பவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, அவற்றைத் திருத்துவதற்கு முனைந்தால் அதுவே இந்நூலுக்குக் கிடைக்கும் வெற்றியாகும்.