விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கால வேகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாகப் பெருகுகின்றன. அதற்கேற்ற மருத்துவ முறைகளும் பல்வேறு ஆய்வுகள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில், பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதால் ஹோமியோபதி மருத்துவமும் பிரபலமடைந்து வருகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் (1755-1843) ஹோமியோபதி மருத்துவத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். நவீன மருத்துவம் என்று சொல்லப்படும் அலோபதிக்கு அந்தப் பெயரைச் சூட்டியவரும் அவரே. இவர் ஹோமியோபதி பைபிள் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவ முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஹோமியோபதி மருத்துவத்தை முதன்மையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம், இந்த நூலில் மகளிர்க்கு ஏற்படும் பிரத்யேக நோய்கள் குறித்தும், அதற்கான ஹோமியோபதி மருத்துவம் குறித்தும் விளக்கியிருக்கிறார்.
சில நோய்களுக்கு, வெளிப்படையாக அதன் தன்மையைச் சொல்லி மருத்துவரை அணுகி பெண்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்தரங்க நோய்களுக்கு...? அதற்கும் சிகிச்சை பெற வழி உண்டு என்கிறார் நூலாசிரியர்.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள், அவை ஏற்படக் காரணங்கள், நோய் அறிகுறிகள் ஆகியவற்றோடு, அவற்றுக்கான ஹோமியோபதி மருந்துகளையும் தந்து, இந்நூலில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம்.
நூலின் இறுதியில் நோய் மற்றும் மருந்துப் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பது, நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.