விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
‘நோயற்ற வாழ்வே...’ என்று முதல் வரியைச் சொன்னால், ‘குறையற்ற செல்வம்..!’ என்று பள்ளிக் குழந்தைகள் போல் கைகளை உயர்த்தியபடி எல்லோரும் உற்சாகமாகக் குரல் கொடுப்போம். ‘அப்படி நோயின்றி வாழும் வழிமுறைகள் யாருக்கேனும் தெரியுமா’ என்று கேட்டால், உயர்ந்த கைகள் அனைத்தும் தாழ்ந்துவிடும்! அப்படி தாழ்ந்து போகும் கைகளைத் தூக்கிவிடும் நோக்கில் நூலாசிரியர்கள் டாக்டர் டி.வி.தேவராஜன், டாக்டர் எல்.விஜயசுந்தரம் இருவரும் தங்கள் அனுபவத்தின் துணை கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்க்கையை இலக்காகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
மனிதனுக்கு எதனால் நோய்கள் ஏற்படுகின்றன; என்னென்ன விதமான நோய்கள் ஏற்படுகின்றன; அவற்றைத் தடுப்பது எப்படி? குணப்படுத்துவது எப்படி? _ என, இந்த நூலில் நோய்களையும் மருத்துவ முறைகளையும் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன; எவ்வளவு கலோரி கொண்டிருக்கின்றன; சமச்சீர் உணவில் எதை, எவ்வளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ‘உணவும் உடல் நலமும்’ பகுதியில் விவரித்திருக்கிறார்கள்.
குழந்தைச் செல்வம் குறித்த அத்தியாயத்தில், குழந்தை பிறக்கும் போது என்ன எடையிருக்கும் என்பதில் தொடங்கி, ஓரளவுக்கு சுயமாக இயங்க ஆரம்பிப்பது வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் என்னென்ன செய்யும், பெற்றோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அங்குலம் அங்குலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
எய்ட்ஸ் குறித்த அத்தியாயத்திலும், உடலுறவு குறித்த அத்தியாயத்திலும் கூறியுள்ள விஷயங்கள், பொது அறிவில் உறைந்து போயிருக்கும் பல அம்சங்களை புரட்டிப் போட்டு, புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன.
சரி... நூலை வாங்கிவிட்டு படிப்பதற்கு ஆவலுடன் துடித்துக் கொண்டிருப்பீர்கள். படியுங்கள்... பழுத்த அனுபவம் மிக்க மருத்துவர்கள் இருவரும் தரும் ஆலோசனைகளைக் கடைப்பிடித்து, நோய்களை வெல்லுங்கள்.