விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பாவேந்தராக மக்களால் போற்றப்படும் பாரதிதாசனின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் கவிஞராக விளங்கி, தமிழுக்காகப் பெரும் கவிஞர் படையையே தோற்றுவித்தவர் பாவேந்தர். மகாகவி பாரதியாரிடம் பற்றுகொண்டு உடனிருந்தவர்.அவருடைய யாப்பும் மரபும், இசையமுதாகத் துள்ளி விளையாடும். வீரம் செறிந்த வரிகளாக தமிழுக்குப் படைக்கலனாக முன்நிற்கும்.
தமிழாசியராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் ஓய்வு ஒழிச்சலின்றி செயலாற்றியவர் பாரதிதாசன். அப்படி எழுபது வயதைக் கடந்தபின்னும் ‘குயில்’ இதழையும் திரைத்துறையிலும் பீடு நடை போட்டவர்.
திரைப்படம் தயாரிக்கத் துவங்கிய காலகட்டத்தில் பாவேந்தருடன் தங்கியிருந்து அவருடைய மாணவராகவும், எழுத்தராகவும், உதவியாளராகவும் தொண்டாற்றியவர் கவிஞர் பொன்னடியான்.
பாவேந்தரிடம் பணிபுரிந்தபோது, அப்போது நடந்த உண்மைச் சம்பவங்களை, அந்தந்த நாளோடும் சூழ்நிலையோடும் தகுந்த சான்றோடும், நுணுக்கமாகவும் சுவையாகவும் இந்த நூலில் எழுதியிருக்கிறார் கவிஞர் பொன்னடியான். தமிழை அமுதெனப் பாடிய பாவேந்தரின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க, தமிழ் மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதும் அவருக்கு இருந்த பற்றைத் தெளிவாக அறியமுடிகிறது.
பாவேந்தரோடு நெருங்கிப் பழகியவர்களான கவிஞர் கண்ணதாசன், ஈ.வெ.கி.சம்பத், கி.ஆ.பெ.விசுவநாதம், கலைஞர் மு.கருணாநிதி, ம.பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், தமிழ்வாணன், மு.வ., அகிலன், ஏ.எல்.சீனிவாசன் மற்றும் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்களையும் இந்நூலின் நினைவலைகளில் காணமுடிகிறது.
மாபெரும் கவிஞரின் வாழ்வில் கடைசி ஐந்தாண்டுகளில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நம் கண்முன்னே விரியச் செய்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் பாவேந்தரின் மகன் மன்னர் மன்னனுடைய மன அலையும் வருவது சிறப்பு சேர்க்கிறது. அவருடைய கருத்துகள் ஆய்வுக்கு ஆதாரம்!