விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள்.
பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறுவயதில் சிரமங்கள் மிகுந்த வாழ்க்கை. இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால் சாரீர வளமை மிகுந்திருந்த சிவன், குரல் வளத்தோடு பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்தோடு கீர்த்தனைகளை தாமே இயற்றியும் பாடியிருக்கிறார். கடந்த நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் பாபநாசம் சிவன்.
இப்போது கர்நாடக இசைக் கச்சேரிகளில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் பாடுவதற்குள் பாடகர்களும் சோர்வடைகிறார்கள்; ரசிகர்களுக்கும் அலுப்பு தட்டி விடுகிறது. ஆனால், பாபநாசம் சிவன் போன்றோர் உடல் முடியாத நிலையிலும் பல மணி நேரம் தொடர்ந்து பாடி ரசிகர்களைக் கிறங்கடித்திருக்கிறார்கள்.
1914, ஆனி மாதம். என் தமையனார் குளித்தலை பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோது, அவருடைய திருமணம் நடந்தேறியது. அந்தக் கலியாண கோஷ்டியுடன் அண்மையில் உள்ள ரத்னகிரீஸ்வரரை தரிசிக்கச் சென்றோம். திருமலையில் தரிசனம் செய்து திரும்புகையில், மலைப்படிக்கட்டில் தடுக்கி விழுந்துவிட்டேன். பலத்த அடி; ஆனால் அப்போது தெரியவில்லை. அன்று இரவு எதிர்வீட்டு வக்கீல் சி.எஸ்.மகாதேவ ராமையா, கொஞ்சம் பாடு என்றார். அனைவரும் ஆர்வத்துடன் இருந்ததால், இரவு 9 மணி முதல் 3 மணி வரை பாடினேன். பாடி முடிந்ததும் என்னால் நகர முடியவில்லை. கால் தூணாய் வீங்கிவிட்டது. தாங்க முடியாத வலி. இருவர் மெள்ளத் தூக்கி தங்கியிருந்த இடத்தில் படுக்கப் போட்டு, ஏதேதோ தைலமெல்லாம் தடவி ஒத்தடம் கொடுத்தார்கள்... _ இது பாபநாசம் சிவனின் அனுபவ வார்த்தைகள்.
பாபநாசம் சிவன் என்ற இசை மேதையை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் இந்த நூலில், சிவனின் வாழ்க்கைச் சம்பவங்களை கோபுலுவின் உயிரோட்டமுள்ள ஓவியங்களுடன் சுவை குன்றாமல் தந்திருக்கிறார் நூலாசிரியர் வீயெஸ்வி. மேலும், சிவன் தம் கைப்பட எழுதிவைத்த குறிப்புகளிலிருந்து, அவர் கூறியபடியே சில தகவல்களைத் தந்துள்ளது, வாசகரிடம் அந்த மேதையே நேரில் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.