விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிறகு தங்கள் கருத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வார்கள்!
இதேபோல, ‘ஆண்தான் மேலானவன், பெண் தாழ்ந்தவள்’ என்றும் பல கதைகள் ஆதிகாலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன.
ஏன் இப்படி இத்தனைக் கதைகளைக் கட்டியிருக்கிறார்கள்? பெண்ணைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய கதைகள், நிச்சயம் பெண்களால் உருவாக்கியிருக்க முடியாது. இந்த அத்தனைக் கதைகளும், ஆண்களின் வசதிக்காக ஆணாதிக்க சமுதாயம் கட்டிவிட்ட வெறும் கதைகளே என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கிறபோது உணரமுடியும்.
‘பெண் ஏன் அடிமையானாள்?’
_ கடந்த நூற்றாண்டில் சார்லஸ் டார்வின் தொடங்கி வைத்த இந்த ‘ஆண்_பெண் அரசியல்’ விவாதத்தை _ தமிழ்நாட்டில் பெரியார் கையிலெடுத்துப் போராடி வந்த விவாதத்தை _ இப்போது டாக்டர் ஷாலினி இந்தப் புத்தகத்தில் மீண்டும் தொடர்கிறார். பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பதை ‘ஆண்&பெண் பாலியல் போராட்டம்’ மூலம் ஆதியோடு அந்தமாக ஆராய்ந்து, ‘தலைமைப் பீடத்தில் இருந்தது பெண்தான்!’ என்பதை எளிய நடையில் ஆவணப்படுத்துகிறார்.
அதேநேரத்தில், ‘பெண்ணின் தலைமைப் பதவி ஆணிடம் எப்படி வந்தது..? மீண்டும் அந்தப் பதவியை பெண்ணுக்குத் தராமல் எதற்காக ஆணே வைத்திருக்கிறான்? பெண்ணின் அறிவை அகற்ற எத்தனை விதமான உத்திகளை ஆண் பயன்படுத்துகிறான்?’ என்று பல கேள்விகள். அத்தனைக்கும் பளீர் பதில்கள் _ சாட்சிகளோடு சொல்கிறார் டாக்டர் ஷாலினி.
இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக எத்தகைய தகுதி உடைய ஆண்களை, பெண் கலவிக்கு தேர்வு செய்கிறாள்? அத்தகைய தகுதிகளை அவள் எதிர்பார்ப்பதற்கான காரணங்கள் என்னென்ன? எதற்கு ஒரே பெண்ணையே பல ஆண்கள் விரும்புகிறார்கள்? ஏன் பல பெண்கள் ஒரே ஆணின் மீது ஆசை கொள்கிறார்கள். இந்த ஆண்&பெண் கவர்ச்சியின் ஆதி என்ன? அந்தம் என்ன?
_ நூலைப் படித்துப் பாருங்கள்... அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்!