விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மனிதனின் வாழ்க்கையில் எண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாழ்வில் நிகழும் சில சம்பவங்களை வைத்து, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சக்தி உண்டு என பின்னாளில் கண்டறிந்தனர். அதன் வெளிப்பாடே நியூமராலஜி எனும் எண் ஜோதிடமாக வளர்ந்தது. இது, நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் மக்களால் பார்க்கப்படுகிறது.
மனிதன் பிறந்த தேதியைக் கணக்கிட்டு, அதை பிறப்பு எண் என்றும், தேதி, மாதம், வருடம் அனைத்தும் கூட்டி மொத்தமாக்கிய எண்ணை விதி எண் என்றும் சொல்கிறது நியூமராலஜி. ஆனால், இந்த நூல் நியூமராலஜியை மட்டும் மையமாகக் கொண்டதல்ல! எந்த ஒரு மாதத்தில் பிறந்திருந்தாலும், பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, அந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள், அவர்கள் வணங்க வேண்டிய கோயில்கள், தெய்வங்கள் போன்றவற்றை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் கே.பி.வித்யாதரன்.
பொதுவாக, ஒன்று முதல் ஒன்பது எண்களுக்குக் கூட்டுத் தொகையை வைத்துக்கொண்டு, அதற்கு மட்டுமே பலன்கள் சொல்லப்படுவது வாடிக்கை. ஆனால் இவர், 31 தேதிகளில், ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் தனித்தனியாக பலன்கள், பரிகாரக் கோயில்களைச் சொல்லியிருப்பது சிறப்பு.
இந்நூல், எண் அடிப்படையில் தங்கள் வாழ்வின் எதிர்கால பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக அமைந்து, பலன் அளிக்கும்.