விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீர்மானித்தோம். முதல் கட்டமாக, அந்தக் கால இசையுலக சாதனையாளர்கள் சிலரின் பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட முடிவெடுத்தோம்.
இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்த நூலில் செம்மங்குடி விரிவாகப் பேசியிருக்கிறார். மேதை பாலக்காடு மணி ஐயர், தமது அமெரிக்க அனுபவங்களை அலசியிருக்கிறார். இன்னொரு கட்டுரையில் புல்லாங்குழல் மாலியின் ‘மினி பயாகிரஃபி’ இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். அதே மாதிரி, மகாராஜபுரம் சந்தானமும் குன்னக்குடியும் விகடனுக்காக சந்தித்து உரையாடியதைப் படிக்கும்போது, பக்கத்தில் நின்று அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும்!
இன்னொரு கட்டுரையில் டி.வி.ஜி._யுடன் ஜேசுதாஸ் பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது விளங்கும்!
முத்தாய்ப்பாக, பன்னிரண்டு வயது பாலகனாக மேண்டோலின் ஸ்ரீனிவாஸ், முதன் முதலாக சென்னையில் நடத்திய சபா கச்சேரி பற்றிய வர்ணனையும், ஸ்ரீனிவாஸின் பேட்டியும் இடம் பெற்றிருக்கின்றன.
கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் என்று வட்டம் போட்டுக் கொள்ளாமல், பொதுவாக இசையில் சாதித்த இருவரின் பேட்டியும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. வெண்கலக் குரலில் பாடிப் பரவசப்படுத்திய டி.ஆர்.மகாலிங்கத்தை அவருடைய சோழவந்தான் வீட்டில் சந்தித்து எழுதிய கட்டுரையும், ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்திப் படத்தில் அற்புதமாகப் பாடியதற்காக அப்போது தேசிய விருது பெற்ற எஸ்.பி.பி._யின் பேட்டியும், இந்த நூலுக்கு கூடுதல் கவர்ச்சி கொடுத்திருக்கிறது.
பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் இந்த நூலைப் படித்து, சுவைத்து, ரசிக்க முடியும். தேவை, கொஞ்சம் இசை ஆர்வம் மட்டுமே!