விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மக்கள்தொகையில் சீனா எந்த வேகத்தில் முதலிடம் பிடித்ததோ, அதைவிடப் பன்மடங்கு வேகத்தில் தொழிற்துறையிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் தன் நாட்டில் நுழைந்து, தன் மக்களைத் துன்புறுத்தி, தன் தேசத்தை கலவரப்படுத்திய ஜப்பானைக் காட்டிலும், அதிரடியாக பல சாதனைகளை நிகழ்த்தி, அரசியலில் மட்டுமல்லாமல் தொழிற்துறையிலும் இன்று புரட்சி நடத்தி வருகிறது சீனா.
ஜப்பான் மட்டுமல்லாமல் இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சவால் விடும் அளவுக்கு, ஒரு வல்லரசு நாடாக சீனா இன்று பிரகாசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அண்டை நாடுகளை நம்பி நாட்டின் செல்வ வளத்தைப் பறிகொடுத்த பெருந்துயரம். மற்றொன்று, அந்தத் துயரத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி.
மன்னராட்சி தொடங்கி, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ ஆட்சி வரைக்கும் யார் யார் நாட்டை வழி நடத்தினார்கள், யாருடைய வழிநடத்தல் சரியான பாதையை நோக்கி நாட்டை கூட்டிச் சென்றது, யாருடைய வழிகாட்டுதல் நாட்டை திசைமாற்றிவிட்டது,
ஸி ஸுங், கன்ஃபூஷியஸ் தொடங்கி மாவோ வழிநடத்திய சீனா இன்று தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறது... என்பது வரைக்கும் பல்வேறு சம்பவங்களை சுருக்கமாக இந்நூலில் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ் விவரிக்கிறார். இது முழுக்க முழுக்க சீனாவின் அரசியல் பின்னணியோடு அதன் சமூக வரலாற்றையும் சொல்கிற புத்தகம்.
சீனா அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது..? என்பதைத் தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும் இந்தப் புத்தகம் நல்ல விருந்து.