விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சுவீகாரம் என்றதும் அதெல்லாம் குழந்தை இல்லாத தம்பதியரது சமாசாரம்! என்றே நம்மில் பலரும் நினைக்கிறோம். அது சரியல்ல. ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி தொடங்கி, காப்பகங்கள் வரை பல்வேறு இடங்களில், எதிர்காலத்தில் பொறுப்பான குடிமக்களாகத் திகழ வேண்டிய எத்தனையோ குழந்தைகள் உங்களைப் போன்ற அன்பான ஒரு குடும்பத்தின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட ரோஜாக் கம்புகளைச் சுமந்து வந்து நமது வீட்டில் பதியன் போட வேண்டும் என்று நூலாசிரியர் வினிதா பார்கவா இந்த நூலில் மனிதாபிமானத்துடன் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
குந்திக்குப் பிறந்த கர்ணன் தேரோட்டியால் வளர்க்கப்பட்டான். ஆண்டாள், பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். தேவகியின் மகனான கண்ணன், யசோதையால் வளர்க்கப்பட்டார். இவையெல்லாமே ஒரு வகையில் சுவீகாரம்தான். ஒரு தம்பதிக்கு மகனாகப் பிறந்து, மற்றொருவரால் வளர்க்கப்படுதல் என்பதுதான் சுவீகாரத்தின் ஆதார அம்சம். அப்படிப் பார்க்கும்போது சுவீகாரம் என்பது நமக்குப் புதிய விஷயமல்ல.
குழந்தையில்லாதவர்கள் தத்தெடுத்தால், அவர்களது துன்பம் பாதியாகக் குறையும்; ஏற்கெனவே குழந்தையுள்ளவர்கள் தத்தெடுத்தால், அவர்களது இன்பம் இரட்டிப்பாகிவிடும். தத்தெடுத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்... அந்தக் குழந்தை உண்மையாக நம்மை நேசிக்குமா... அந்தக் குழந்தையை நம்மால் அதே போல் நேசிக்க முடியுமா... என்பது போன்ற கேள்விகளும் பயங்களும் உள்ளவர்கள், இந்த நூலைப் படித்தால் நிச்சயம் அவற்றை உதறிவிடுவார்கள்.
ஒரு குழந்தை எவருடையதாக இருந்தாலும் அது குழந்தைதான்! அது தரும் சந்தோஷம் அலாதியானது. சொந்தக் குழந்தை உள்ளவர்கள் கூட, மற்றொரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது நல்லது! என்று நமக்குப் பரிந்துரைக்கும் நூலாசிரியர் வினிதா பார்கவா, தத்தெடுத்தல் தொடர்பாக நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் இந்த நூலில் விடை கண்டிருக்கிறார்.