விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதோ, அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதோ நேற்றைய உலகத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம். அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் பச்சை பாப்பாகூட பயப்படாத காலம் இது. மனசில் படுகிற மாதிரி இனிதாக எடுத்துச் சொல்லித்தான் வேலை வாங்கியாக வேண்டிய கட்டாயம் இப்போது!
தோளில் கைபோட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, நோகாமல் வேலை வாங்குகிற கலையில் வல்லவர்கள் யாரோ... அவர்களுக்கே அடுத்தடுத்த பதவி உயர்வுகள் காத்திருக்கின்றன. நிர்வாகத் திறமை என்பதே அத்தனை ஊழியர்களையும் ஒரு குடும்பமாக நினைக்கச் செய்து, கஷ்டமே தெரியாமல் வேலை வாங்குகிற சூட்சமம்தான் என்று அத்தனை பேரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பெரிய பெரிய கார்பொரேட் நிறுவனங்களில், வேலை நேரத்துக்கு நடுநடுவே ஆட்டம், பாட்டம், ஜோக் என்று போட்டிகள் நடத்தி ஊழியர்களை உற்சாகப்படுத்துகிற வழக்கம் வந்துகொண்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கிய பதவியில் இருப்பவர்களே சிரிக்கப் பேசுகிற கலையில் வல்லவர்களாக இருந்துவிட்டால் அங்கே பளுவில்லாமல் பளிச்சென்று வேலைகள் முடிவதைப் பார்க்கமுடிகிறது.
புதுப் புது சவால்களை எதிர்கொண்டு, காலநேரம் பார்க்காமல் வேலை செய்தாக வேண்டிய இன்றைய காலகட்டத்தில், பணியிடத்தில் நகைச்சுவை என்பது எப்படியெல்லாம் நன்மைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறது என்பதைத்தான் கே.சத்தியநாராயணா இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார். எழுத்தாளராகவும், பல பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருக்கும் சத்தியநாராயணா, பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படுகிறார். அவர் எழுதிய ‘பவர் ஆஃப் ஹ்யூமர்’ என்ற ஆங்கில நூலை எளிமையாக தமிழில் வடித்திருக்கிறார் அஞ்சனா தேவ்.
இயல்பாவே நான் கொஞ்சம் கண்டிப்பான மூடி டைப் சார்... இனிமேல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொண்டு ஊழியர்களை புதிய பாணியில் வேலை வாங்குவதெல்லாம் நடக்கிற காரியமா? என்று கேட்கிற ரகமா நீங்கள்?
அவசரப்பட்டு அவநம்பிக்கை காட்டாமல் சுகமாகப் படியுங்கள் இந்தப் புத்தகத்தை! முடிக்கும்போது புது நம்பிக்கை பிறந்திருக்கும்... கலகலப்பு என்பது பிறப்போடு வருவதல்ல... மனசு வைத்தால் யாருக்கும் அது எளிதானதே என்று புரியும்.