தமிழாய்வு மன்றம் எடுத்த இம்முயற்சி அமிழ்தினும் இனிய தமிழைப் பரப்பும் பணியாகும். ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெறுவதையும் வரவேற்கும் செயல் உலகத்தோடு ஒட்ட ஒழுகலைப் படம் பிடிக்கிறது. அதனால் தான் தொல்காப்பியத்துச் செய்யுளியலில் உள்ள "நோக்கு' என்பதற்கு இளம்பூரணர் உரையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் போலும். திருக்குறள் மூல நூலை சிதைப்பதைச் சாடுகிறார் தமிழண்ணல். அக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக சங்கம் வளர்த்த பெருங்கோமான் பாண்டியத்துரைத் தேவர் பண்பாடு இன்று எல்லாராலும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல். "துவக்கம்' என்ற சொல் சரியல்ல: "தொடக்கம் ' என்பதே இலக்கண வழக்கு என்று வினா -விடையில் தரப்பட்டிருக்கும் தகவல். ஆழமாக தமிழைக் கற்றுத் தெளிய விரும்பும் ஆர்வலர் அனைவரும் விரும்பி இந்த இதழைச் சுவைப்பர் என்பது நிச்சயம்.