விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நாம் வாழும் இந்த பூமி, எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நிலையாக ஓர் இடத்தில் இருப்பதுபோல் நாம் உணரக்கூடிய இந்த பூமி, உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இல்லை; சுற்றிக்கொண்டே இருக்கிறது. இது பூமி கிரகத்தைப் பற்றிய விஷயம்.
இந்த பூமியும்கூட, நிலம், நீர் என்று பிரிந்துள்ளது. நீர்ப்பரப்புக்கு அடியில்கூட நில மட்டம் இருக்கிறது. இந்த நிலமட்டத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்களும் பூமியின் அடிப்பகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன.
இப்போதெல்லாம் திடீரென்று சில இடங்களில் கடல் மட்டம் உயர்கிறது என்கிறார்கள். ஆனால் உண்மையில் கடல் மட்டம் உயரவில்லை; கடல்நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியே உயர்கிறது.... அதுவே கடல் மட்டம் உயர்வதாக நமக்கு ஒரு தோற்றத்தைத் தருகிறது என்கிறார் நூலாசிரியர் க.பொன்முடி.
கடல் நீர் சூழ்ந்துள்ள நிலம், அதாவது கண்டங்கள்தான் உயர்கின்றன என்பதற்கு சில ஆதாரங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் நூலாசிரியர்.
கண்டங்கள் நகர்தல் என்ற கோட்பாட்டை இவர் சில ஆதாரங்களை முன்வைத்து மறுக்கிறார். முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்கள் பிறகு நகர்ந்தன என்ற கூற்றையும் நூலாசிரியர் ஏற்கவில்லை. கண்டங்கள் நகரவில்லை; உயர்கின்றன என்பதே இவர் கருத்து.
ஒரு காலத்தில் நட்சத்திரங்களாக இருந்தவையே கால ஓட்டத்தில் குளிர்ந்து பாறையாக இறுகி பூமி போன்ற கிரகங்களாகின்றன என்பதைச் சொல்லி, மேற்கண்ட இந்தக் கருத்துகளுக்கு பக்க பலமாக பல தகவல்களை நூலாசிரியர் முன்வைக்கிறார். அந்தத் தகவல்கள் வாசகர்களுக்கு பூமியைப் பற்றிய பல விவரங்களை அறிந்துகொள்ள ஆவலை ஏற்படுத்தும்.