விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
குழந்தைகளுக்கு புதிதாக எதையாவது சொல்லும்போது, அவர்கள் ஏன்? எப்படி? என்ற கேள்விக்கணையோடுதான் அவற்றை அணுகுகிறார்கள். அதுதான் அறிவுத்தேடலின் ஆரம்பம். பிரகலாதன், அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரத மகரிஷி சொன்ன பாடங்களைக் கேட்டு அறிவில் சிறந்தவனாக வளர்ந்தான் என்று சொல்கிறது புராணம்.
இப்படி, கேள்விகளைக் கேட்டு வளரும் குழந்தைகளுக்கு தகுந்த விளக்கங்களைப் பெரியவர்கள் தரவேண்டும். ஆனால் பெரியவர்கள் சிலருக்கு அதற்கான பொறுமை இருப்பதில்லை. எனவே குழந்தைகள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் இடத்தைத் தேடிப்போய், கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடுகின்றனர்.
தப்பு செய்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் _ என்று சொன்னால் மட்டும், குழந்தைகள் திருப்தியடைந்து போவதில்லை. அதற்கு உம்மாச்சியைப் பற்றிய கதையும் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்குச் சொல்வதற்கான தெய்வீகக் கதைகள் நிறைய இருக்கின்றன. குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது, இயல்பாகத் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன, எதற்காகக் கோயிலில் விக்கிரகங்கள் இருக்கின்றன, அது என்ன மாடு மாதிரி சிலை, அதை ஏன் இங்கே வைத்திருக்கிறார்கள்.... இப்படி எல்லாம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலைத் தரவேண்டுமே! அதற்கு பெரியவர்கள் அவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே! இதற்குக் கைகொடுக்கிறது இந்த நூல்.
கோயில்களில் உள்ள பொதுவான தெய்வங்களைப் பற்றியும், நடைமுறைகளைப் பற்றியும், கோயில்களில் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. நான்கு சிறுவர்களுக்கும் தாத்தா ஒருவருக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பல தகவல்களை இதில் நூலாசிரியர் பிரபுசங்கர் கூறியிருக்கிறார்.
சில தெய்வங்களின் வரலாறுகளும், ஆன்மிகக் கதைகளும் சிறுவர்கள் புரிந்துகொள்ளும்படி சுவையாகக் கூறப்பட்டுள்ளன. சிறு வயதிலேயே கடவுளைப் பற்றியும், அவரைத் தொழுவதன் அவசியத்தைப் பற்றியும், கோயில்களுக்குச் செல்லும் நடைமுறைகள் பற்றியும் குழந்தைகள் அறியவேண்டியது அவசியம். இந்நூலைப் படிப்பதால் சிறுவர்கள், கோயில்களின் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள். கோயிலுக்குச் சென்று மன அமைதியோடு தியானிப்பது, அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை சிறார்கள் உணர்ந்து கொள்வார்கள்.