விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மக்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு தலைவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்களில் ஒருவனாக இருந்தாலே போதும் என்கிற உணர்வை நம் முன் வைக்கும் கட்டுரைகள். வெறும் விளக்கங்கள்தான் என்று ஒதுக்கிவிட முடியாத உண்மைகள் நிறைந்த வார்த்தைகள் நேரடியாகவே நம்மைச் சுடுகின்றன.
எந்த வகையிலும் சமூகம் நம்மைப் பாதிக்கவில்லை என்று சொல்லக்கூடிய மனநிலையில் இல்லை நாம். சமூகம் சில காரணிகளால் தொடர்ந்து நம்மை பாதித்தவண்ணமே இருக்கின்றது. அதனோடு இசைந்தோ, அல்லது விலகியோ போய்க்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நம்முடைய உண்மையான நிலை. அரசியல், பொருளாதாரம், சினிமா, உலகமயமாதல், அணு உலை, உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழரின் நிலை... இப்படி நிறைய காரணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இயந்திரத்தனமாகிவிட்ட வாழ்க்கையின் நடுவே போட்டிப் போட்டுக்கொண்டு ஓடவே நமக்கு நேரமில்லை. நமக்கே நமக்கான ஒரு பாதிப்பு வருகிறவரை சமூகத்தின் அட்டவணைக்குள் நாமும் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. பிறருடைய பெயர்கூட தெரியாத நமக்கு அவருடைய துயர் எப்படி தெரியப்போகிறது?
ஒரு விஷயம் நம் குரல்வளையை நெருக்கும்போதுதான் அது ஏற்படுத்தும் வலி நமக்குத் தெரிய வருகிறது. இந்தக் கட்டுரைகள் தனிப்பட்ட மனிதருடைய கோபங்கள், சமூக அக்கறைகள் அல்ல... நாம் எல்லோரும் பேசவேண்டிய, பேசியிருக்கவேண்டிய குரல்கள். நமக்கான குரல்கள்.
ஜூனியர் விகடன் சிந்தனை பகுதியில் வெளியான இக்கட்டுரைகள் ஏற்படுத்திய பாதிப்பை எல்லோருமே உணர்ந்திருக்க முடியும். உண்மைகளை மிக அருகே சந்திக்கத் தயாராயிருங்கள். உங்கள் கோபங்களுக்கும் கரிசனங்களுக்கும் சரியான தீர்வு நிச்சயம் ஏற்படும். இந்தப் புத்தகம் அந்த வேலையைச் செய்யும்.