விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உலக உயிர்கள் அனைத்துக்கும் நம்பிக்கைதான் அடிப்படை. இந்த நம்பிக்கைக்கு ஆரம்பப் புள்ளி பாதுகாப்பு.
எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது மனித சமுதாயம். இந்த நீண்ட பயணத்தில் அது கண்டிருக்கும் வளர்ச்சியும் அபரிதமானது. அத்தகைய வளர்ச்சி பெருக, பெருக அனுபவங்களும் அதிகமாகக் கிடைத்தன. அவற்றின் வெளிப்பாடாகத்தான் பாதுகாப்புத் திட்டங்களும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.
இருப்பினும், தொழிற்சாலைகளிலும் சரி, வீடுகளிலும் சரி, ஏதோ ஒரு வகையில் ஆபத்து அவனைத் துரத்துகிறது.
இந்த ஆபத்துகளைத் தவிர்க்கவும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளிலிருந்து தப்பிக்கவும் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை இந்த நூலில் வரைபடங்களுடன் விளக்குகிறார் எஸ்.பி.சந்தானம்.
அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி?
_ இப்படி பல கேள்விகளுக்கு அனுபவ ரீதியாக பதிலளித்திருக்கிறார் நூல் ஆசிரியர்.
அதுமட்டுமல்ல, வீடுகளில் விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான வழிமுறைகளையும், பொது இடங்களில் விபத்து நடந்தால் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் எளிய நடையில் விளக்குகிறார்.
அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் முதல், வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வரும் பெண்கள் வரை, இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் விபத்துத் தடுப்பு முறைகளையும் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றினால் பயனடைவது நிச்சயம்.
இந்த நூலாசிரியரின் ஆலோசனைகள், பாதுகாப்புடன் வாழ வழிவகுத்துக் கொடுக்கும்.