விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்துகொண்டே இருக்கின்றன. காடுகளும் மலைகளும் பூமியின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பெரும் மாற்றங்களைச் சந்திக்கின்றன. காற்றும் திசை மாறுகிறது... கடலும் பொங்கி எழுகிறது... இப்படி, சூரியக் குடும்பம் தோன்றியதிலிருந்து, தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டே இருக்கிறது இந்த பூமி.
இயற்கையாக நடக்கும் எந்தவொரு மாற்றமும் மனிதனைப் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழவேண்டிய மனிதன் மட்டும் இயற்கையால் படைக்கப்பட்ட யாவற்றையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நினைத்து, அதில் மாற்றங்களைச் செய்து பார்க்கிறான். அந்த மாற்றம் எதுவும் நிலைகொள்ளாது என்பதை உணரவும் அவன் மறுக்கின்றான். அப்படி அவன், இயற்கையால் படைக்கப்பட்ட நதியைத்தான் முதலில் மாற்றத்துக்கு உட்படுத்தினான்.
மலைகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும் நதி பிறக்கிறது. ஆனால், சில நதிகள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதைக் கண்டுகொள்ள இயலாத அளவுக்குக் கண்காணாத இடத்திலிருந்து சிறுசிறு ஊற்றாகப் பிறப்பெடுத்து, ஊர்ந்து, தவழ்ந்து ஓடி வருகின்றன. இப்படி, இயற்கை தன்னைத் தற்காத்துக்கொள்ள பல மர்ம முடிச்சுகளை போட்டுவைத்துள்ளது. மனிதன் அதை அவிழ்க்க முயலும்போதுதான், இயற்கை தன் கோபப் பெருந்தீயைக் கொப்பளிக்கிறது. முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தவனுக்கு கோபத்தைக் குறைக்க வழி தெரியவில்லை. அப்படி முடியாமல் போகிற நேரங்களில்தான் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற பேரபாயங்கள் நேர்கின்றன.
மனிதனின் சுயநல அட்டூழியத்தால் இன்று பல நதிகள் உயிரிழந்து வருகின்றன என்பதையும், தாமிரபரணி நதியில் தொடங்கி கூவம் நதி வரை அந்த அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருப்பதையும் மனதில் ஆதங்கம் பொங்க, நேர்மையுடன் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சி.மகேந்திரன். இதனால் நிகழப்போகும் பேரபாயத்தை நாம் எப்போது உணரப்போகிறோம்? அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இயற்கையோடு முட்டிமோதுவதை நிறுத்திவிட்டு எப்போது விழித்தெழப்போகிறோம்? நதிதோறும் நடக்கும் மணல் கொள்ளைகளை எப்போது நிறுத்தப் போகிறோம்..? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதலில் எழுதப்போவது யார்? _ இப்படி, பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தச் சம்பவங்களை அடிக்கோடிட்டு, கேள்விகளைப் பாய்ச்சுகிறார் நூலாசிரியர் இந்த நூலில்.
மருதுவின் ஓவியங்களுடன் ஜூனியர் விகடன் இதழில் விழிப்பு உணர்வு தொடராக வெளிவந்த சி.மகேந்திரனின் ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் இப்போது, இன்னும் விரிவான, விளக்கமான பல அத்தியாயங்களுடன் வந்திருக்கிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் உங்களுக்கான அறிவுரையோ, கட்டளையோ அல்ல; நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுகிற பேராபத்திலிருந்து மக்களைக் காத்துவிடலாம் என்று எத்தனிக்கிற ஆலோசனைகள் மட்டுமே.