விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது; சிலவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது & இதுதான் கற்றலின் சித்தாந்தம். குறிப்பாக, பொருளாதாரம், சேமிப்பு, பங்கு வர்த்தகம்... இப்படி புதிது புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்துக்குத் தீனி போட இன்று நிறைய ஊடகங்கள் இருந்தாலும் எல்லோரும் கற்றுக்கொள்ள சிறந்த வழி, புத்தகம் எனும் அச்சு ஊடகம்தான்.
ஷேர் மார்க்கெட், சென்செக்ஸ் என்ற சொற்கள் சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், பணத்தைப் பெருக்க நினைப்பவர்கள் இந்தச் சொற்களைத் தவிர்த்து விட்டு பணம் பண்ண முடியாது. செய்தித்தாள் முதல் தொலைக்காட்சி வரை இதற்கென்று தனியாக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு பணம் புழங்கும் துறை இது. எளிமையாகப் பணம் சம்பாதிக்க இருக்கும் ஆயிரம் வழிகளில் பங்கு வர்த்தகமும் ஒன்று.
இந்தத் துறை குறித்து அறியாதவர்களுக்காக ஆனந்த விகடனில் சிகரம் தொடுவோம் என்ற தலைப்பில், பங்கு வர்த்தகத் துறையில் புகழ் பெற்று விளங்கும் நாகப்பன்_புகழேந்தி இருவரும் ஒரு குழந்தைக்குக் கதை சொல்வது போல மிக எளிமையாக விளக்கி, தொடராக எழுதினார்கள். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் உங்கள் கைகளில் இருக்கும் இந்தப் புத்தகம்.
பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த புத்தகம் நல்ல வழிகாட்டியாக இருக்கும். நீங்கள் எதையெல்லாம் கடினம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ, அவையெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்கின்றனர் இவர்கள். பான் கார்டைக்கூட இந்தப் புத்தகத்தின் துணைகொண்டு மிக எளிமையாக வாங்க முடியும். பங்கு வர்த்தகம் பற்றி சிலர் கொண்டுள்ள தவறான கருத்துக்களையும் இந்தப் புத்தகம் மாற்றும்.