விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
திரைப்படங்கள், இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகத் திகழ்கின்றன. அப்படி உருவாகும் திரைப்படத்துக்காக, பல்வேறு துறையினரும் உழைக்கின்றனர். அவர்களில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு சிறப்பானது; முக்கியமானதும்கூட!
திரைப்படத்துக்காக கேமராவில் படம் பிடிப்பது, ஒளிப்பதிவு. கேமராவை இயக்கி படம் பிடிப்பவர் ஒளிப்பதிவாளர். இரு பரிமாணப் பார்வையில் தூரிகை கொண்டு தீட்டும் ஓவியம் போல் காட்சி பதிவாவதால், ஒளிப்பதிவாளர்களை ஒளி ஓவியர்கள் என்று சொல்வதும் நியாயமே.
நூற்றாண்டு கடந்து சாதித்துக் கொண்டிருக்கும் சினிமா துறையில், இந்த ஒளி ஓவியர்கள் எண்ணற்றோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி, தமிழ் சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த கேமராமேன்கள் பற்றிய தொகுப்பே இந்த நூல். இதில், முக்கியமான சில கேமராமேன்களின் வாழ்க்கையும், அவர்களின் பணியும் பற்றிய தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்வில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்களும், அவர்கள் எந்தப் படங்களில் பணியாற்றினார்கள் என்ற தகவல்களும் சுவைபடத் தொகுக்கப்பட்டுள்ளது.
கேமராவை எந்தக் கோணத்தில் வைத்துப் படம் பிடித்தால் காட்சி அழகுபெறும்; ஒளிப்பதிவில் உள்ள தனித்தன்மை; யார் யார் எந்தெந்தத் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அழியாப் புகழ் பெற்றனர்; மந்திர தந்திர காட்சிகளின் மூலம் ரசிகர்களை சீட்டிலேயே கட்டிப்போட்டிருந்தது எப்படி; ஒளிப்பதிவு செய்வதில் அக்காலம் முதல் இக்காலம் வரை உள்ள சூத்திரங்கள் ஆகியவை விளக்கமாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.
சினிமா குறித்த ஆர்வமும் கலையுணர்வும் கொண்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, ஒளி ஓவியர் கனவில் வளரும் கலைஞர்களுக்கும் இது ஒரு கையேடு.